சென்னை பெருநகர பகுதிக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் திட்ட தொடக்க பயிலரங்கம் இன்று நடக்கிறது

சென்னை: சென்னை பெருநகர பகுதிக்கான 3ம் முழுமை திட்டம் தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் திட்டம் தொடக்க பயிலரங்கம் இன்று நடக்கிறது என்றும், இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை வரை 1,189 சதுர கி.மீட்டருக்கான திட்டம் உருவாக்கப்படுகிறது என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், உலக வங்கியின் உதவியுடன் ‘சென்னை பெருநகர பகுதிக்கு 3வது முழுமை திட்டத்திற்கான (2027-2046) தொலைநோக்கு ஆவணம்’  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த ஆவணத்தை பயனாளர்கள் பங்கேற்பு அணுகுமுறை மூலம் சென்னை மாவட்டம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை பெருநகர பகுதிக்கு (1,189 சதுர கி.மீ.) தயாரிக்கப்படுகிறது.

இந்த 3ம் முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணம், சென்னை பெருநகர பகுதிக்கான நீடித்த சுற்றுச்சூழல், துடிப்பான பொருளாதாரம் மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்குத் திட்டமிட பயன்படும். இது தொடர்பாக, பல்வேறு பயனாளர்களின் கருத்துக்களைக் கேட்க, ‘திட்ட தொடக்கப் பயிலரங்கம்’ 19ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள ரெயின் ட்ரீ ஓட்டலில் நடைபெற உள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற உள்ள பயிலரங்கில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை பெருநகரப் பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த திட்ட தொடக்கப் பயிலரங்கை  தொடர்ந்து சென்னை பெருநகரப் பகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பயிலரங்கங்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், மூன்றாம் முழுமைத் திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதைப் பற்றி பயனாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பங்கேற்கச் செய்யும் பிரத்யேக இணையதளம் இப்பயிலரங்கு நிகழ்ச்சியில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிலரங்கின் நேரடி ஒளிபரப்பை பொதுமக்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: