நியூசி. ஏ அணியுடன் 3வது டெஸ்ட் 113 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

பெங்களூரு: நியூசிலாந்து ஏ அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் (4 நாள், அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 293 ரன், நியூசிலாந்து ஏ அணி 237 ரன் எடுத்து ஆல் அவுட்டாகின. 56 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பிரியங்க் பாஞ்சால் 62 ரன், ருதுராஜ் கெயிக்வாட் 94 ரன், சர்பராஸ் கான் 63 ரன், ரஜத் பத்திதார் 109* ரன் விளாசினர்.

இதைத் தொடர்ந்து, 416 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி, 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்திருந்தது. ஜோ கார்ட்டர் (6), ஜோ வாக்கர் (0) இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். வாக்கர் 7 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் கார்ட்டர் உறுதியுடன் போராட... டேன் கிளீவர் 44 ரன், மார்க் சாப்மேன் 45 ரன், ராபர்ட் ஓடானெல், கேப்டன் டாம் புரூஸ் தலா 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சோலியா 8, பிளெட்சர் 13 ரன் எடுக்க, கார்ட்டர் 111 ரன் (230 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி முகேஷ் குமார் வேகத்தில் கிளீன் போல்டானார்.

ஜேக்கப் டஃபி 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து ஏ அணி 85.2 ஓவரில் 302 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. பிஷர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ பந்துவீச்சில் சவுரவ் குமார் 5 விக்கெட் (27.2-3-103-5), சர்பராஸ் 2, ஷர்துல், முகேஷ், உம்ரான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் சென்னையில் (செப். 22, 25, 27) நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: