பாக். பிரதமர் லண்டன் பயணத்தில் ராணுவ தளபதி நியமிக்க நவாசுடன் ஆலோசனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் தனது லண்டன் பயணத்தில், முன்னாள் பிரதமரும் சகோதரருமான நவாஸ் ஷெரீப்புடன் ஆலோசனை நடத்திய பின்னரே ராணுவ தளபதி நியமனம் குறித்து முடிவெடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக ராணுவ தளபதி பதவி இருந்து வருகிறது. அந்நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் பலமுறை ராணுவ புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ராணுவ தளபதியை நியமிப்பது என்பது அந்நாட்டின் பிரதமருக்கு மிகுந்த தலைவலியான பொறுப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா (61) பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிகிறது. இதனால், நவம்பர் மாதத்தில் புதிய ராணுவ தளபதியை நியமிக்க பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் தீர்மானித்துள்ளார். இதற்கிடையே, இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்ள லண்டன் சென்றுள்ள பிரதமர் செபாஸ் ஷெரீப், அங்கு தனது சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்து புதிய ராணுவ தளபதி நியமனம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.

நவாசுடன் செபாஸ் ஆலோசித்த பின்னரே இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்ற நவாஸ், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறுவதாக லண்டன் சென்றவர் இதுவரையிலும் பாகிஸ்தான் திரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தங்களின் ஊழலை மறைக்க சாதகமான ஒருவரை ராணுவ தளபதியாக நியமிக்க செபாஸ் ஷெரீப் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories: