மக்கள் நலனே முக்கியம் என அரசு செயலாற்றுகிறது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ புகழாரம்

சூலூர்: மக்கள் நலமே முக்கியம் என அரசு செயலாற்றி வருகிறது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறையை சிறப்பாக நடத்துகிறார் என சூலூர் அதிமுக எம்எல்ஏ புகழாரம் சூட்டியுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ்  தொடங்கி வைத்தார்.

இதில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.  முகாமில், சிறப்பு விருந்தினராக சூலூர் எம்எல்ஏ  கந்தசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் மருத்துவத்துறை சிறபாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் மருத்துவ பிரச்னைகள் வந்த போதும் தமிழகத்தில் பிரச்னை எளிதாக தீர்க்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்  மருத்துவத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்தி  வருகிறார்.

திமுக - அதிமுக கட்சிகளின் சின்னங்கள் வெவ்வேறாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்றுதான். மக்கள் நலமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அரசு செயலாற்றி வருகிறது என்றார். அதிமுக எம்எல்ஏ ஒருவர், தமிழக அரசையும், முதல்வரையும் புகழ்ந்து பேசியது அதிமுக  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.

இது குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது: உண்மையைத்தான் பேசினேன். நான் அதிமுக எம்எல்ஏவாக இருந்தாலும் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் என்னுடைய கடமையை செய்வேன். இதனால், திமுகவிற்கு தாவ உள்ளதாக கூறுவதில் உண்மையில்லை.  நான் எப்போதுமே  அதிமுகவின் உண்மை தொண்டன். என் உடம்பில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறது.

முதல்வர் திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு எம்எல்ஏகளும் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான 10 பிரச்னைகளை தெரிவிக்குமாறு கேட்டார். அந்த வகையில் தான் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும்  தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான 10 பிரச்னைகளை எழுதி கலெக்டரிடம் அளித்துள்ளோம்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி பாகுபாடு இல்லாமல் மக்கள் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: