×

சிங்கிகுளம் சமண மலையில் ராஜராஜ சோழன் காலத்திய செம்பு காசுகள் கண்டெடுப்பு: 13ம் நூற்றாண்டை சேர்ந்த செங்கல் கிடைத்தது

நாங்குநேரி: சிங்கிகுளம் சமண மலையில் 10ம் நூற்றாண்டு ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் பயன்பாட்டில் இருந்த செம்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று 13ம் நூற்றாண்டின் செங்கல்லும் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிங்கிகுளம் சமணமலையில் பழங்கால சமணர்களின் படுக்கைகள், குகைகள், நீர்ச்சுனைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் உள்ளது.

நெல்லை தொல்லியல் கழகம் என்ற அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் குழுவினர் சிங்கிகுளம் சமண மலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பாறை சரிவுகளுக்கிடையே 10ம் நூற்றாண்டின் ராஜராஜசோழன் காலத்தை சேர்ந்த செம்பாலான நாகரி எழுத்துடன் 8 ஈழக்காசுகள் மற்றும் 13ம் நூற்றண்டைச் சேர்ந்த பெரிய செங்கலும் கிடைத்துள்ளன.

ஈழப் போர் மூலம் இலங்கையை, முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு உலோகங்களில்  வெளியிடப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. அக்காசுகள் முதலாம் ராஜராஜசோழன் முதல், முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவை பொதுமக்களால் செம்பாலான ஈழக்காசு, ஈழக்கருங்காசு என அழைக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட ஈழக்காசுகள் சுமார் 3 முதல் 5 கிராம் வரை எடை இருக்கும். கி.பி 1000-1100ம் ஆண்டை சேர்ந்தது என கருதப்படும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ‘ராஜ ராஜ’ என்று நாகிரியில் எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடித்த இவை சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் ஆளுகையின் கீழ் மாறி, மாறி இருந்து வந்ததால் பாண்டிய நாட்டு மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 22க்கு 15ல் பெரிய செங்கல் ஒன்றும் இக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செம்புக் காசுகளை தொல்லியல் ஆய்வுக் குழுவினர் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் ஒப்படைத்துள்ளனர்.


Tags : Rajaraja Sozhan ,Singkulam Samana mountain , Singikulam Jain Hill, Rajaraja Cholan, copper coins found
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...