×

அதிமுக தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய விவகாரம்; முதற்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறது சிபிசிஐடி

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை குழு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வேனில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 முன்னாள் எம்எல்ஏக்கள், 2 காவலர்கள் உட்பட 45 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 7ம் தேதி விசாரணை அதிகாரி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் செல்வின் சாந்தகுமார். லதா, ரம்யா, ரேணுகா ஆகியோர் கொண்ட குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து நேரடியாக வீடியோ பதிவுகளுடன் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதைதொடர்ந்து சிபிசிஐடி அளித்த சம்மன் படி கடந்த 14ம் தேதி அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அப்போது, ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள், அலுவலக சொத்து பத்திரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தாக கூறப்படுகிறது. பின்னர் அலுவலக மேலாளர் மகாலிங்கம் அளித்த விளக்கத்தை தொடர்ந்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் உதவி ஆய்வாளர், காவலர் என 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த 15ம் தேதி 2.50 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்திய வழக்கில், புகார் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மூகத்தின் எம்ஆர்சி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சிபிசிஐடி சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மூகம், ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அளித்த விளக்கம் மற்றும் பதிலை சிபிசிஐடி வாக்குமூலமாக பதிவு செய்தனர். இந்நிலையில்  அதிமுக அலுவலகம் மோதல் வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் சிபிசிஐடி விசாரணை குழுவினர் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக நாளை நீதிமன்றத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags : CPCID , AIADMK head office vandalism case; The CBCID will file the preliminary investigation report in the court tomorrow
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...