காலி நிலம் பிரச்னையில் பெண்ணை அவமானப்படுத்த ‘உச்சா’ போன நபருக்கு சிறை; வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: அவமானப்படுத்தும் நோக்கத்துடன் பெண்ணின் கண்முன்னே சிறுநீர் கழித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி சாஸ்திரிநகர் 7வது தெருவை சேர்ந்தவர் இருதயமேரி (55). இவரின் கணவர் கடந்த 2014ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரது வீட்டையொட்டி இவருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. நேற்றுமுன்தினம் தனது வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சூசை ஆரோக்கியதாஸ் (46) என்பவர் சென்று இருதயமேரி வீடு கட்டியுள்ள இடத்தின் பக்கத்தில் உள்ள காலி இடத்தில் அரை அடி நிலம் எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து இருதயமேரி தனது இடத்துக்குரிய அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன என்று தெரிவித்துள்ளார். நிலம் சம்பந்தமாக என்னை மிரட்டினால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று இருதயமேரி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த ஆரோக்கியதாஸ், அங்குள்ள காலி நிலத்தில் இருதயமேரி  கண் முன்னே சிறுநீர் கழித்து அவரை அவமானப்படுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருதயமேரி, இதுகுறித்து எம்கேபி.நகர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது சூசை ஆரோக்கியதாஸ், பெண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புசட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ்  வழக்குபதிவு செய்து சூசை ஆரோக்கியதாஸை கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: