அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்த இந்திய சினிமா தயாரிப்பாளர் மீரட்டில் கைது

மீரட்: அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய சினிமா தயாரிப்பாளர் ரத்னேஷ் பூட்டானியை உத்தரபிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ரத்னேஷ் பூட்டானி என்பவர், கடந்த 1996ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. ஆனால், கலிபோர்னியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், அமெரிக்காவில் இருந்து தப்பியோடி இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.

அதன்பின் மும்பையில் தொழிலை தொடங்கிய அவர், தனது சகோதரை வைத்து சினிமா எடுத்தார். பாலிவுட்டில் தன்னை திரைப்பட தயாரிப்பாளராக காட்டிக் கொண்டு, சினிமா துறையில் ஆர்வம் காட்டி வந்தார். இதற்கிடையே அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ, தப்பியோடிய ரத்னேஷ் பூட்டானியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்டது. அதன் தொடர்ச்சியாக ரத்னேஷ் பூட்டானி குறித்த தகவல்களை இந்தியா - அமெரிக்கா புலனாய்வு அமைப்புகள் பகிர்ந்து கொண்டன. ரத்தேஷ் பூட்டானியின் குடும்பம் மீரட்டில் வசிப்பதால், தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மீரட் தனிப்படை போலீசார் ரத்தேஷ் பூட்டானியை அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து மீரட் தனிப்படை கூடுதல் எஸ்பி பிரிஜேஷ் சிங் கூறுகையில், ‘அமெரிக்காவில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதான ரத்னேஷ் பூட்டானி அமெரிக்காவில் இருந்து தப்பித்து பல நாடுகளிலும் சுற்றித் திரிந்துள்ளார். அவரை தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பணம் பறிப்பு வழக்கில் கடந்த 2020ல் ரத்னேஷ் பூட்டானி கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைக்கு பின்னர், அமெரிக்க புலனாய்வு அமைப்பிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்’ என்றார்.

Related Stories: