×

தமிழக பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் மறுசீரமைப்புக்கு கூடுதல் பதவிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை: தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு நிலவுகிறது. இது தவிர, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், அதை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெறவும் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாக பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்கவும், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் உருவாக்கப்பட வேண்டும். மேலும், கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாகவும், ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பள்ளிக்கல்வித் துறையை மறுசீரமைக்க அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வித் துறை ஆணையர், அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை அரசு கவனத்துடன் ஆய்வு செய்த பிறகு பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக சீரமைப்புக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதன்படி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஆகியவற்றுக்கு தலா 1 துணை இயக்குநர் பதவிகள் உருவாக்கப்படுகின்றது. இதுதவிர, புதிதாக 32 மாவட்டக் கல்வி அலுவலர், 15 வட்டாரக் கல்வி அலுவலர், 16 தனி உதவியாளர், 86 கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் உள்ள 2 இணை இயக்குநர் பணியிடங்கள் எஸ்சிஇஆர்டி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு மாற்றி வழங்கப்பட உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க தலா 1 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் எண்ணிக்கை 120-ல் இருந்து 152 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கு விரைவில் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான அதிகாரமும், பணிகளும் திருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil Nadu School Education Department , Creation of Additional Posts , Administrative Reorganization, Tamil Nadu School Education Department, Promulgation of Ordinance
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...