கேத்தி பகுதியில் போலீஸ் மிரட்டலால் பரபரப்பு; முன் அறிவிப்பின்றி சாலை மூடல்; 10 கிராம போக்குவரத்து அடியோடு முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

குன்னூர்:  கேத்தி பகுதியில் முன் அறிவிப்பின்றி சாலையை மூடிய ரயில்வே நிர்வாகத்தால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியை சுற்றிலும் சுமார் 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு பணிகளுக்கும் நகரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் எல்லநள்ளி வழியாக மட்டுமே செல்ல முடியும். இப்பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது‌. சாலையின் குறுக்கே தண்டவாளம் அமைந்துள்ளதால் தினமும் ரயில் கடந்து செல்லும் வரை மக்கள் காத்திருக்கும் வாகன ஓட்டிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் தண்டவாளம் பராமரிப்பு என்னும் பெயரில் எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென சாலையை நேற்று மூடியது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி பொது மக்களை மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில்வே துறையினர் இந்த திடீர் நடவடிக்கையால் கிராம மக்களின் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவ தேவைக்கு என எங்கும்‌ செல்ல முடியாமல் மக்கள் கிராமத்தில் முடங்கியுள்ளனர்.

இது குறித்து பொது அதிகாரிகளிடம் முறையிட்டால் பொதுமக்களை காவல்துறையினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. எவ்விதமான அறிவிப்பும் இல்லாமல், ரயில்வே நிர்வாகம் தன்னிச்சையாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இப்பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை மூலம் உரிய தீர்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: