கொல்லிமலையில் தடை விலகியது: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வந்தது. இதனால், அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரம், செடி, கொடிகள் அடித்து வரப்பட்டது. மேலும், பிரசித்தி பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நுங்கும், நுரையுமாக செந்நிறத்தில் தண்ணீர் கொட்டியது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள், பெரிய அளவிலான கற்கள் ஆகாய கங்கையில் வந்து விழுந்ததால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், சுற்றிப்பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் செல்லும் புளியஞ்சோலை பகுதியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கொல்லிமலையில் உள்ள நம்மஅருவி மற்றும் மாசிலா அருவி ஆகியவற்றில் மட்டும், சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர். தற்போது, கொல்லிமலை பகுதிகளில் மழை இல்லாததால், காட்டாறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதையடுத்து, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க, வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் உள்ள நுழைவாயில் கதவு திறக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று, கொல்லிமலைக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல், புளியஞ்சோலை அருவிகளிலும் குளிக்க தடை நீக்கப்பட்டுள்ளது.

Related Stories: