×

நாகர்கோவிலில் தொழிலதிபர் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை காப்பாற்றிய கோம்பை நாய்: இடைவிடாமல் குரைத்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் தொழிலதிபர் வீட்டில் வளர்க்கப்பட்ட கோம்பை நாய் மூலம் அந்த வீட்டில் பல லட்ச ரூபாய் தங்க நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பின. நாகர்கோவில்  சகோதரர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (67). தொழிலதிபர். விவசாய சம்பந்தமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி  மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  சமீபத்தில் விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றிருந்தார். இந்த நிலையில் கடந்த 15ம்தேதி நள்ளிரவில் வீட்டில் ஏதோ மர்ம நபர்கள் நடமாடும் சத்தம் கேட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது  குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சைரன் ஒலித்ததால், மர்ம நபர்கள் தப்பினர். இதையடுத்து போலீசார் வீட்டில் சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. இது குறித்து சென்னையில் உள்ள விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் 16ம்தேதி மாலை வந்து பார்த்த போது வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் அப்படியே இருந்தன. கொள்ளையர்கள் பணம், நகைகளை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றது தெரிய வந்தது. விஜயகுமார் ஒரு பையில் சில்லரை காசுகளை சேர்த்து வைத்திருந்தார். அதை தூக்கிக்கொண்டு ஓடிய கொள்ளையர்கள் அருகில் உள்ள கட்டிடத்தில் அதை வைத்து விட்டு சென்று விட்டனர். அந்த சில்லரை காசு பையும் மீட்கப்பட்டது. பீரோவில் இருந்த ஒரு மணி பர்சில் R2 ஆயிரம் பணம் வைத்து இருந்தனர். அந்த பணத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர். வீட்டுக்கு வந்ததும் விஜயகுமார் நகைகள் இருந்த பையை தான் முதலில் பார்த்தார். அதில் இருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தன. அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டார்.
 
சம்பவம் நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில் 2 விதமான கைரேகைகள் சிக்கி உள்ளன. அந்த கைரேகைகளை பழைய கொள்ளை சம்பவங்களில் பதிவான ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். ெகாள்ளை முயற்சி நடந்த விஜயகுமார் வீட்டின் அருகில் கட்டிட பணிகள் நடக்கின்றன. அங்கு யார், யார் வேலைக்கு வந்தார்கள். அவர்களில் யாராவது மாயமாகி உள்ளார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜயகுமாரின் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறுகையில், விஜயகுமார் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்கள். அன்றைய தினம் வழக்கத்தை விட அதிகமாக நாய் குரைத்தது. இடைவிடாமல் அதிக சத்தத்துடன் குரைத்துக் கொண்டே இருந்ததால், வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தோம். அப்போது தான் வீட்டுக்குள் மர்ம நபர்கள் நின்றனர். உடனடியாக விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தோம். அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் விஜயகுமாரின் உறவினர்கள் வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பினர் என்றனர்.

விஜயகுமார் வீட்டில் வளர்க்கப்படும் நாய், கோம்பை இன நாய் ஆகும். இது தமிழக நாய் இனங்களில் ஒன்றாகும். நாட்டு நாய் என்றும் அழைப்பார்கள். வீடுகளில் வெளிநாடுகளில் உள்ள நாய்களை வளர்ப்பதை விட, இது போன்ற நாட்டு நாய்களை வளர்ப்பது மிகவும் பாதுகாப்பானது என்பதை, கோம்பை நாய் நிரூபித்து உள்ளது. நாய் இடைவிடாமல் குரைத்தததால் தான் விஜயகுமார் வீட்டில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின என போலீசார் கூறினர்.

Tags : Nagarkovil , Gompai dog saves gold jewelery worth lakhs of rupees from businessman's house in Nagercoil: Robbers flee due to incessant barking
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...