ரூ.99 கோடி ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டம் மூலம் வண்டியூர் கண்மாயில் அமைகிறது செயற்கை தீவு; உல்லாசப் படகில் செல்லலாம் ஜாலி சவாரி: ஈர்க்கும் ‘மாதிரி வரைபடங்கள்’ வெளியீடு

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயில் தண்ணீரை தேக்கி, நடுவில் செயற்கைத் தீவு அமைத்து, உல்லாச படகுகள் மூலம் ஜாலி சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைகின்றன. கரையோரத்தில் பூங்காவும் வடிவமைத்து செயல்படுத்தும் ரூ.99 கோடியிலான ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கான மாதிரி வடிவ வரைபடங்கள் வெளியாகி பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையின் பெருமைக்குரிய அடையாளமாகவும், வடபுறத்து நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வரும் அற்புத அதிசயமாக வண்டியூர் கண்மாய் திகழ்ந்து வருகிறது. மாநகரில் 650 ஏக்கருக்கு பரந்து விரிந்திருக்கும் இந்த வண்டியூர் கண்மாய், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 450 ஏக்கர் அளவிற்கென தற்போது சுருங்கிப் போயிருக்கிறது. கண்மாயில் 80 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே தேக்கலாம் என்ற நிலையில், 10 அடி உயரத்திற்கு மண்மேவி கிடக்கிறது. இதனை தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தினால் 250 மில்லியன் கனஅடி அளவிற்கான நீரை இங்கு தேக்க முடியும் என்கின்றனர்.

வண்டியூர் கண்மாயின் கரையோரத்தில் தற்போதுள்ள பூங்காவிற்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வருகை தினசரி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நடை பழகுவோர் மட்டுமின்றி, ஸ்கேட்டிங், சிலம்பம் என பயிற்சி பெறும் சிறுவர், சிறுமியர் கூட்டமும் வருகிறது. உடல் நலன் மேம்படுத்தும் இயற்கை பானங்கள், சூப், பயறு வகைகள் என சுகாதார உணவுகள் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.

கண்மாய்க்கு நடுவே செயற்கை தீவு: மாநகரின் வடபகுதி மக்களின் பொழுது போக்கிற்கான முக்கிய இடமான, இக்கண்மாயை மேலும் ஆழப்படுத்தி, நீர் நிறைத்து, கண்மாய்க்கு நடுவிலே செயற்கைத் தீவு அமைத்து, உல்லாசப் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தி, புதுப்பொலிவோடு மாற்ற ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டம் ரூ.99 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் மதுரை எம்எல்ஏ தளபதி, இதற்கான கோரிக்கையை முன்மொழிந்ததை தொடர்ந்து, மதுரை மாநகராட்சியுடன் இணைந்து சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பி வைத்து, இத்திட்டம் திரும்ப உயிர் பெற்றுள்ளது. பொழுதுபோக்கு வசதியற்ற மதுரை மக்களுக்கான ஒரு வாய்ப்பாக மட்டுமல்லாது, மதுரையில் சுற்றுலா மேம்பாடு பெறவும், ஆண்டு முழுக்க தண்ணீர் தேங்குவதால், நகரின் நிலத்தடி நீர் மட்டம் காக்கும் முயற்சியாகவும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகம் கண்டுள்ளன.

சென்னையின் ‘மெரீனா’ பீச் போன்று சுற்றுலாத்தலமாக மாறும் இந்த வண்டியூர் கண்மாயில் ஏற்படுத்தப்போகும் வசதிகள் குறித்த மாதிரி வரைபடங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இது அத்தனை தரப்பினரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கண்மாயைச் சுற்றி 7 கி.மீ தூரம் நடைபாதை: இத்திட்டத்தின்படி வண்டியூர் கண்மாயைச் சுற்றிய 7 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உருவாகிறது. கண்மாயின் மையப்பகுதியின் அழகிய சிறிய தீவு ஒன்று உருவாக்கப்படுகிறது. இந்த தீவிற்கு செல்ல மரத்திலான பாலம் அமைக்கப்பட்டு, அதில் இருந்தபடியே சுற்றிலும் தண்ணீர் நிரம்பிய நிலையில் இருக்கும் அழகை ரசித்து மகிழலாம், இந்த மரப்பாலத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறவும் இருக்கைகள் உள்ளிட்ட தங்கிச் செல்லும் வசதிகள் அமைக்கப்படுகின்றன. மரப்பாலத்தில் நடந்து செல்வது தவிர, இந்த தீவுக்கு செல்வதற்கு உல்லாச படகுகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, கொடைக்கானல் ஏரி பயணம் போலவே, மதுரையின் இந்த கண்மாயிலும் படகு சவாரி வசதி செய்யப்படுகிறது. இந்த அற்புத இயற்கை நீர்நிலை சுற்றுலாப்பகுதியை ரசசிக்க வரும் குழந்தைகள், பெரியவர்கள் அறுசுவை உணவருந்த சிற்றுண்டிக் கடைகளுடன், தீவுப்பகுதியில் தமிழன்னை சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் கண்மாய்க் கரை பகுதியில் நள்ளிரவையும் பேரழகாக்கும் செயற்கை, இசை நீரூற்றுகளும் ஏற்படுத்தப்படுகிறது. இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன், அரிய பல மரங்கள், செடிகொடிகளுடனான கரை ஓரத்து பூங்காவும் ஏற்படுத்தப்படுகிறது.

இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னைக்கு அடுத்த பெருநகர பெருமையுடையதாக மதுரை மாநகரம் இருக்கிறது. இயற்கை சார்ந்த சுற்றுலாத்தலமாக இந்த வண்டியூர் கண்மாயை மாற்றும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த இந்த சுற்றுலா தலம் எப்படி அமைகிறது என்பதற்கான மாதிரி வரைபடங்கள் உருவாக்கப்பட்டு, திட்ட அறிக்கையுடன் அரசின் கவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைத்து பணிகள் துவங்கும். இந்த ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டத்தை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று பணிகள் துவங்கப்படும்’’ என்றார்.

Related Stories: