×

காட்டில் உள்ள அந்நிய மரங்களை அகற்றாவிட்டால் வனம் அழித்துவிடும்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டி நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நிய மரங்கள் வேகமாக பரவி தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும்  என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வனப்பகுதிகளில் பரவும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதுமலை வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது  தொடர்பான கருத்துரு, நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறி, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்நிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை எனவும், தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள், அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அக்டோபர் 11ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை மெதுவாக செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சுற்றுச்சூழலையும், வனத்தையும் பாதுகாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அந்நிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டாவிட்டால், அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என்பதால் தனியார் நிறுவனங்களை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு நிதியைப் பெற்று விரைந்து அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : High Court , If alien trees are not removed, forest will be destroyed: High Court opined
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...