×

ஆதார் இருந்தால் போதும் 58 ஆர்டிஓ சேவைகளை ஆன்லைனில் பெறலாம்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட 58 ஆர்டிஓ சேவைகளை ஆதார் உதவியுடன் ஆன்லைனிலேயே பெறும் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்டிஓ) நாள்தோறும் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் பலர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும், பொதுமக்களுக்கு விரைவாக, நேர்மையாக சேவைகளை வழங்கவும் ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமையை மாற்றுதல், எல்எல்ஆர் விண்ணப்பித்தல், சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குதல், முகவரி மாற்றம், போன்ற 58 சேவைகளை ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலமாகவே மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் இருந்த இடத்தில் இருந்து சேவைகளை பெற வசதியாகவும், அவர்களின் நேரத்தை சேமிக்கவும், ஆர்டிஓ அலுவலகங்களின் சுமையை குறைக்கவும் ஆன்லைனில் 58 சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதில், மக்கள் அவர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் மூலமாக இந்த சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம், ஆதார் இல்லாதவர்களுக்கு ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பம் தரப்பட்டு, வேறு பிற அடையாள ஆவணங்களும் சேவைகள் வழங்கப்படுகின்றன’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Aadhaar ,Union Govt , Aadhaar is enough to get 58 RTO services online: Union Govt
× RELATED பஸ்சில் இலவசமாக பயணித்த வாக்காளர்கள்