×

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் சி.வி.சண்முகம் வாக்குமூலம்; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தாக்குதல் தொடர்பாக ஓபிஎஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி தரப்பினர், சென்னை அடுத்த வானகரத்தில் கூடியது. அந்நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். இதனால், இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தும், அதிமுக அலுவலகமும் சூறையாடப்பட்டது. மேலும், ஆவணங்கள், பொருட்களை வேனில் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்ைன ஏற்படுவதை தடுக்க வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இதனை எதிர்த்து எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது ஜூலை 20ம் தேதி நடந்த விசாரணையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி டிஎஸ்பி ெவங்கடேசன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் அதிமுக தலைமை கழகத்துக்கு 2 முறை நேரில் சென்று விசாரணை நடத்தியும், ஆவணங்கள், வீடியோக்கள், தடயங்களை சேகரித்தும் சென்றனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார், புகார் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்துக்கு சிபிசிஐடி போலீசார் நேரில் சென்றனர்.

அங்கு வைத்து அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது சி.வி.சண்முகம் அளித்த தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். அவர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதும், அலுவலக சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாகவும் பல்வேறு புகார்களை போலீசாரிடம் தெரிவித்தார். அதில், பலரின் பெயர்களையும் குறிப்பிட்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாக்குமூலத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் மோதலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது குறித்தும், மோதலில் யாருக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது பற்றியும், யார் அதை முன்னின்று நடத்தினர் என்பது பற்றியும் சி.வி. சண்முகம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் மட்டுமே இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை போலீசார் வாங்கியுள்ளனர். அடுத்தக்கட்டமாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் மோதல் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எடப்பாடி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனால், அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரம் விசாரணை சூடுபிடிக்க ெதாடங்கியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் மோதல் தொடர்பான வழக்கு இன்னும் சில தினங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : AIADMK ,CV ,Shanmugam ,CBCID ,OPS , AIADMK office looting case CV Shanmugam's statement to CBCID police; Public accusation against OPS supporters
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...