×

துரித மின் இணைப்பு பெற 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.23.37 கோடி மானியம்

சென்னை: துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.23.37 கோடி மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, “விவசாயத்திற்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வைப்புத்தொகை குதிரை திறனுக்கேற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் (ரூ.2.25 லட்சம் முதல் ரூ.3.60 லட்சம் வரை) வழங்கப்படும். இதனால் அரசிற்கு ஏற்படும் செலவு ரூ.23.37 கோடி ஆகும்” என்று கூறி இருந்தார். அமைச்சரின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 900 ஆதிதிராவிடர் விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் ரூ.21,03,97,500 மற்றும் 100 பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2,33,10,000 90 சதவீத மானியத்தொகையாக மொத்தம் ரூ.23,37,07,500 நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Rs 23.37 crore subsidy for 1,000 Adi Dravidian and tribal farmers to get fast electricity connection
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...