×

எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியல் தயாரிக்க முடிவு: ஷாங்காய் மாநாட்டில் கூட்டு தீர்மானம்

சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளில் தடை செய்யப்பட்ட தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைந்த பட்டியலை தயாரிக்க, மாநாட்டில் கூட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இடம் பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்தது. இதில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் முடிந்ததைத் தொடர்ந்து, 8 நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட மாநாட்டின் கூட்டு தீர்மானம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

பிரதமர் மோடி உட்பட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் அதன் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் கடுமையாக கண்டித்துள்ளனர். தீவிரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உறுதிப்பாட்டை உறுப்பு நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், தீவிரவாதம் பரவுவதற்கு சாதகமான சூழலை தடுப்பதற்கும்,  தீவிரவாதத்திற்கு நிதி உதவி வழங்கும் வழிகளை துண்டிப்பதற்கும், தீவிரவாத அமைப்புகளில் ஆட்சேர்ப்பு மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கும் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளன.

இதற்காக, தேசிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்து அடிப்படையில், எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்குவதற்கான பொதுவான கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : SCO ,Shanghai Conference , Decision to draw up a list of banned terrorist organizations in SCO member states: joint resolution at the Shanghai Conference
× RELATED வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி...