உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பை கண்டித்து 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்; வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்லியில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றும்போது, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உரையாற்றினார். தொன்மைவாய்ந்த நம் தமிழ்மொழியையும், பிற மாநில மொழிகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி, உலகின் உயர்ந்த மொழி என்ற பொய்த் தோற்றத்தை அமித்ஷா புனைய முனைவது, இந்தி ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும்.

எனவே, அமித்ஷாவின் இந்திவெறிப் பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் சனிக்கிழமை (24ம் தேதி) மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அழைக்கிறேன்.

Related Stories: