×

ரூ.115 கோடி செலவில் கட்டப்பட்ட பெருங்களத்தூர், வேளச்சேரி மேம்பாலங்கள் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை அடுத்த வேளச்சேரியில், ரூ.78.49 கோடி செலவில் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி - தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்து, தற்போது அது நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இந்த பாலம் பயனுள்ளதாக அமையும்.

தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.37 கோடி செலவில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு - சென்னை பாலப்பகுதி கட்டப்பட்டுள்ளது.இந்த மேம்பாலம் நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய 4 பால பகுதியை உடையது. இதில் ஒரு பாலப்பகுதி சென்னை - செங்கல்பட்டு வழித்தட போக்குவரத்திற்கும், மற்றொரு பாலப்பகுதி செங்கல்பட்டு - சென்னை வழித்தட போக்குவரத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சீனிவாச ராகவன் தெரு பகுதிக்கு ஒரு பாலப்பகுதியும், தாம்பரம் கிழக்கு புறவழி சாலை பகுதிக்கு மற்றொரு பாலப்பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு - சென்னை மார்க்கத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தாம்பரம், சென்னை விமான நிலையம், கிண்டி, கோயம்பேடு மற்றும் சென்னையின் இதர பகுதியினை சேர்ந்த மக்களும் மிகுந்த பயனடைவார்கள்.

Tags : Perungalathur ,Velachery ,Chief Minister ,M. K. Stalin , Inauguration of Perungalathur and Velachery flyovers built at a cost of Rs.115 crore; Chief Minister M. K. Stalin inaugurated it
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...