×

சிதிலமடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வியாசர்பாடி காவல் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது: அதிஷ்டவசமாக போலீசார் தப்பினர்

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி காவல் நிலையம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 2003ம் ஆண்டு இந்த காவல் நிலைய கட்டிடம் முற்றிலும் சிதிலமடைந்ததால், அருகில் உள்ள உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு இந்த காவல் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.
 அங்கு போதிய இடவசதி இல்லாததால், தகர கொட்டகையில் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் இருந்த காவலர் குடியிருப்புகள் சிதலமடைந்ததால், அங்கிருந்த காவலர்கள் அங்கிருந்து காலி செய்து சென்று விட்டனர். தற்போது, சிதிலமடைந்த ஒரு கட்டிடத்தில் வியாசர்பாடி காவல் நிலைய குற்ற பிரிவு இயங்கி வருகிறது.

எனவே, இந்த காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு 9 கிரவுண்ட் நிலம் 1973ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தில் இருந்து காவல்துறை வாங்கியது. இதில், 3 கிரவுண்ட் நிலம் மேம்பால பணிக்காக நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள இடத்தில் காவல் நிலைய கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால், சிதிலமடைந்த கட்டிடத்தில் போலீசார் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறைக்கு அருகே உள்ள அறையின் மேற்கூரையின் சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதை பார்த்து காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். சிமென்ட் பூச்சு விழுந்ததில் கீழே மற்றும் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆவணங்கள் சேதமடைந்தன.

அதிஷ்டவசமாக அந்த நேரம் அந்த அறைக்குள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், இடிபாடுகளை அகற்றி காவல் நிலையம் சுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் கூறுகையில், ‘‘சிதிலமடைந்த கட்டிடத்தில் தினமும் பயத்தோடு தான் வேலை செய்கிறோம். பெண் போலீசாருக்கு உடை மாற்ற அறை, கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இங்கு இல்லை. குற்றப்பிரிவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் சூழ்நிலையில் உள்ளது.

காவல் நிலத்தை சுற்றியுள்ள கட்டிடங்களும் மிகவும் பழுதடைந்துள்ளதால் வரும் மழை காலம் வரை இந்த கட்டிடங்கள் தாங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏதாவது ஒரு கட்டிடத்தில் லேசாக விரிசல் விட்டு கட்டிடம் விழத் தொடங்கினால் மிகப்பெரிய உயிரிழப்புக்கள் ஏற்படும். எனவே உடனடியாக உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக வியாசர்பாடி காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி, தற்போது உள்ள இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்,’’ என்றனர்.

*ஆய்வு மட்டுமே நடந்தது
வியாசர்பாடி காவல் நிலைய கட்டிடத்தின் நிலை குறித்து கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி தினகரன் நாளிதழில், இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம் என்ற தலைப்பில், படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியை பார்த்து, இணை ஆணையர் ரம்யா பாரதி மறுநாளே அந்த காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தார். ஆனால் அதன்பிறகு வேறு எந்த ஆக்கபூர்வமான பணிகளும் நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால் நேற்றைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என பொதுமக்கள் தெரித்தனர்.

*ஆவணங்கள் மாயம்
வியாசர்பாடி காவல் நிலையம் உள்ள இடத்திற்கான முறையான ஆவணம் காணவில்லை எனவும், 1973ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்திடமிருந்து காவல்துறை சார்பில் வாங்கியதற்கான எந்தவித சான்றும் இல்லை எனவும் எனவே புதிதாக கட்டிடம் கட்ட தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் போர்டு சென்றால், அவர்கள் ஆவணங்களை கேட்பதாகவும், பாழடைந்த கட்டிடங்களை இடிக்க சொன்னால் மாநகராட்சி அதிகாரிகள் ஆவணங்களை கேட்பதாகவும், ஆனால் எங்களிடம் இடம் உள்ளது. ஆவணங்கள் இல்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Vyasarpadi police station , Roof of Vyasarpadi police station functioning in dilapidated building collapses: Cops have lucky escape
× RELATED மாவா, கஞ்சா விற்ற 2 பேர் கைது