கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமிர்த ஜோதி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் நாளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி நாளாக அறிவித்து உறுதி மொழியேற்க அறிவித்தார். அதன்படி,  சென்னை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. அப்போது சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி, சமூக நீதி நாள் உறுதி மொழியான, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக்  கடைப்பிடிப்பேன்.

சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப்பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக்  கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்’’ என்ற உறுதி மொழியை வாசித்தார். அதனை தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் உறுதி மொழியை ஏற்று கொண்டனர்.

Related Stories: