×

காக்ராவில் இன்னும் படை வாபசாகவில்லை முதுகில் குத்தும் சீனா செயற்கைக்கோள் படங்கள் மூலம் நிரூபணம்

புதுடெல்லி: படைகள் விலக்கலுக்கு பிறகும் லடாக் எல்லைக்கு அருகே சீன ராணுவத்தின் முகாம் இருப்பது சாட்டிலைட் படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.  இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு லடாக்கின் பல்வேறு முனைகளில் படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. சமீபத்தில், 16வது சுற்று பேச்சில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காக்ரா- ஹாட் ஸ்பிரிங் எல்லை பகுதியில் இருநாட்டு ராணுவமும் திரும்பப் பெறப்பட்டன. கடந்த 12ம் தேதி இந்த படைகள் வாபஸ் முடிந்தது. இதை இருநாட்டு ராணுவமும் சரிபார்த்து கொண்டன.

ஆனால், அதே பகுதியில் சிறிது தூரத்துக்கு அப்பால் சீன படைகள் முகாமிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. முதலில் காக்ராவில் சீன படைகள் முகாமிட்டபோது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படமும், படை விலகலுக்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அதில்,  படைகள் திரும்பப் பெறப்பட்ட காக்ராவில் இருந்து 3 கிமீ துாரத்துக்கு அப்பால் சீன படைகள் முகாமிட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. இது, சீன ராணுவம் செய்யும் நம்பிக்கை துரோகமாக கருதப்படுகிறது. முதுகில் குத்தும் சீனாவின் இந்த செயலால், இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.
லடாக் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் கோன்சோக் சிடான்சின் கூறுகையில், ‘‘இந்திய ராணுவம் தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற்றுள்ளது.

15, 16ம் ரோந்து பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக  நாங்கள் கால்நடைகளை மேய்த்து வந்தோம். அது, தற்போது இரு நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் கால்நடைகளை மேய்க்க முடியாது,’’ என்றார். இதுவரையில் 4 இடங்களில் இருந்து சீன ராணுவம் வாபஸ் பெற்றுள்ளது. ஆனால், காக்ராவுக்கு வடக்கே உள்ள டெப்சாங் சமவெளி பகுதியில் இந்திய ராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகளுக்கு சீன ராணுவம் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

Tags : China ,Khagra , Back-stabbing China still not withdrawing troops in Khagra as evidenced by satellite images
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன