×

மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் கால்வாய் பணிகள் தரமில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்திற்குட்பட்ட 19வது வார்டில் பல கோடி ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை மற்றும் தெருக்களின் ஓரங்களில் பள்ளங்கள் தொண்டப்பட்டு கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணி தரமற்று இருப்பதாகவும், ஆங்காங்கே லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே இந்த கால்வாய் பணியை நிறுத்திவிட்டு முறையாகவும், தரமாகவும் கால்வாய் கட்ட வேண்டும் என்று மணலி மண்டல அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் பணிகள் தொடர்ந்தது. இந்நிலையில், வார்டு கவுன்சிலர் காசிநாதன் தலைமையில் பொதுமக்கள் நேற்று மஞ்சம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம், தரம் இல்லாத பணியை தொடர வேண்டாம், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊழியர்கள் பணி செய்யாமல் அங்கிருந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மக்களுடைய வரிப்பணத்தில் இங்கு சுமார் 5 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் இந்த கால்வாயை தரமாக கட்டவில்லை. இதனால் வெகு விரைவில் இடிந்து விழுந்து விடும். மேலும் கால்வாய் கட்ட போடப்பட்ட நில அளவுகள் முறைகேடாக உள்ளது. இங்கு தோண்டி எடுக்கப்படும் மணல் இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Manjambakkam , Manjambakkam 200 feet canal work is not up to standard, public alleges
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...