தமிழ் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை திமுக ஆட்சி நிச்சயமாக அளிக்கும்: பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையை திமுக ஆட்சி நிச்சயமாக செய்யும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 144ம் ஆண்டு பிறந்த நாள் விழா, பெரியார் உலகம்-ஆய்வகம்-பெரியாரியல் பயிலகம் அடிக்கல் நாட்டு விழா நேற்று சென்னை பெரியார் திடலில் நடந்தது. விழாவிற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றார்.  சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் ஆய்வகம் -பெரியாரியப் பயிலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: செப்டம்பர் 17ம் நாள் அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் என்பதற்காக மட்டும் இந்தத் திடலுக்கு நாங்கள் வந்தவர்கள் அல்ல, என்றைக்கும் வந்திருக்கிறோம், என்றைக்கும் வந்துகொண்டிருப்போம்.

திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் திடல் தலைமையகம் அல்ல, இந்தத் தமிழினத்திற்கே இதுதான் தலைமையகம் என்று சொல்லத்தக்க வகையில் இந்தத் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. சமூகநீதியின் தலைமையகமாக- சமத்துவத்தின் தலைமையகமாக- பகுத்தறிவின் தலைமையகமாக- தமிழின எழுச்சியின் தலைமையகமாக- பெண்ணுரிமையின் தலைமையகமாக- இந்தப் பெரியார் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல-இந்தியாவினுடைய சமூகநீதிக்காகவும் தலைமையகமாகத்தான் இந்தப் பெரியார் திடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தொடங்கி, அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் பெரியார் திடலுக்கு வராத தலைவர்களே நிச்சயமாக இருக்க முடியாது. பெரியார் உருவாக்கியது பெரியார் திடல். கி.வீரமணி உருவாக்கியிருப்பது பெரியார் உலகம். அத்தகைய உலகச் சிறப்புமிக்க பெரியார் உலகத்தின் அடிக்கல் நாட்டக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் நாளை, சமூகநீதி நாளாக நான் அறிவித்து, அந்த நாளில் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறேன். இது பெரியாருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று மட்டும் நீங்கள் கருத வேண்டாம் - இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை. எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை. இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை. அதேபோல் பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பெரியார், உலகத்தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல-உலகம் முழுமைக்குமான தலைவராக பெரியார் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான், “பெரியார் உலகம்” என்று ஆசிரியர் கி.வீரமணி இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இதன் மூலமாக பெரியாருக்கு இணையான புகழை ஆசிரியர் கி.வீரமணி நிச்சயமாக பெறுகிறார், ‘வீரமணி என்றால் வெற்றி மணி’ என்று கலைஞர் ஒருமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார். தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையை திமுக ஆட்சி நிச்சயமாக செய்யும். இதுவே தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி. அந்த உறுதிமொழியுடன் நம்முடைய கடமை ஆற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரியகருப்பன், கணேசன், ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: