×

புழல் சிறை எதிரே பஸ் நிறுத்த நிழற்குடை சாலை விரிவாக்கத்தில் அகற்றப்பட்டது

புழல்: சென்னை-கொல்கத்தா செல்லும் ஜிஎன்டி சாலையின் சர்வீஸ் சாலையில், புழல் மத்திய சிறைக்கு எதிரே விரிவாக்க பணிகளின்போது, பஸ் நிழற்குடை அகற்றப்பட்டது. பின்னர் புதிய நிழற்குடை அமைக்கப்படாததால், வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அங்குள்ள மரத்தடியில் பழைய மழைநீர் கால்வாயின் மேல் அமர்ந்து, பஸ்சுக்கு காத்திருக்கும் அவல நிலை உள்ளது. மேலும், இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் உள்பட வயதானவர்களிடம் செயின் பறிப்பு, வழிப்பறி, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களும் நடந்து வருகிறது.

இதேபோல் புழல் அம்பேத்கர் சிலை, சைக்கிள் ஷாப், காவாங்கரை ஆகிய 3 பஸ் நிறுத்தங்களில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை இதுவரை அமைக்கப்படவில்லை. அங்கும் மின்விளக்கு வசதி இல்லாததால், பல்வேறு குற்ற சம்பவங்களும் நடக்கிறது. எனவே, புழல் பகுதிகளில் 4 பஸ் நிறுத்தங்களில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை உடனடியாக அமைக்கவும், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் அப்பகுதி மக்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : Puzhal Jail ,Nizhalkudai Road Extension , The bus stop in front of Puzhal Jail has been removed in Nizhalkudai Road Extension
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கஞ்சா பறிமுதல்..!!