பெண்கள் மீதான சுரண்டலை எதிர்த்த மாபெரும் சமூக சீர்திருத்தவாதிதான் பெரியார்: பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் புகழாரம்..!!

டெல்லி: தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா தமிழ் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்:

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் செய்தியில், நம் தேசத்தின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான நமது போராட்டத்தின் உருவகம் தான் பெரியார் என்று தெரிவித்திருக்கிறார். பெரியார் பிறந்தநாளான இன்று பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் விழுமியங்களை நிலைநிறுத்தவும், அவரது பாரம்பரியத்தை போற்றவும் உறுதிமொழி எடுப்போம் என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக காங். தலைவர் டி.கே. சிவகுமார்:

முட்டாள்தனத்திற்கு எதிரான மாபெரும் தலைவர் பெரியார் ராமசாமி என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதை, சுயஅடையாளம் கருத்தியல் புரட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்றும் டி.கே. சிவகுமார் புகழ்ந்துள்ளார்.

பிகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்:

வாழ்நாள் முழுவதும் மத சடங்குகள், ஆடம்பரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் மீதான சுரண்டலை எதிர்த்த மாபெரும் சமூக சீர்திருத்தவாதிதான் பெரியார் என்று பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: