சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வாழ்வாதார உதவி / அழைப்பு மையத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் பெரியகருப்பன்.!

சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுநிறுவனம் சார்பில்  அமைக்கப்பட்டுள்ள

வாழ்வாதார உதவி / அழைப்பு மையத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வாழ்வாதார அழைப்பு மையம் அமைக்கப்படும் என்று  அறிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக சென்னை,  நுங்கம்பாக்கம்,  அன்னை தெரசா  மகளிர்  வளாகத்தில் வாழ்வாதார உதவி / அழைப்பு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாழ்வாதார உதவி / அழைப்பு மையத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் இன்று (17.09.2022) துவக்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாழ்வாதார  உதவி / அழைப்பு மையத்தின் வாயிலாக  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டு பணிகள் குறித்த விவரங்கள், வாழ்வாதாரம் தொடர்பான தொழில் திட்டங்கள் தயாரிப்பது மற்றும் நிதி பெறுவது தொடர்பான ஆலோசனைகள், விவசாயம், விவசாயம் அற்ற தொழில்கள் தொடர்பான தொழில் திட்ட அறிக்கைகள், வங்கி கடன் பெறுவது, மானிய உதவிகள், தொழில்நுட்ப பயிற்சிகள் ஆகியன குறித்தும், அரசு மூலம் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும்.

பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கான வழிமுறைகள், விண்ணப்பிக்கும் முறை, தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகங்களின் விபரங்கள் மற்றும் இளைஞர்கள்  சுய  வேலை  வாய்ப்பு பெற அல்லது மாதாந்திர ஊதியத்துடனான வேலை வாய்ப்பு பெற தேவையான திறன் பயிற்சிகள் குறித்தும் விளக்கம் பெறலாம். கிராமப்புற மக்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் இளைஞர்கள் தங்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த வாழ்வாதார உதவி / அழைப்பு  மையத்தின் மூலம்  இலவசமாக பெற முடியும்.  இந்த வாழ்வாதார அழைப்பு  மையத்திற்கான  பிரத்தியேக  தொலைபேசி  எண்  “155330” ஆகும்.

ஒரே நேரத்தில் ஐந்து அழைப்பாளர்கள் வரை தொடர்பு கொண்டு பதில் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாழ்வாதார உதவி / அழைப்பு மையமானது அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தொலைபேசி  மற்றும் கைப்பேசி வாயிலாக சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாழ்வாதார உதவி / அழைப்பு  மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிகழ்ச்சியில்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., அவர்கள், ஊரக வளர்ச்சித் துறை அரசு இணைச் செயலாளர் திரு சந்திரசேகர் சகாமுரி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் திருமதி. எம்.அருணா, இ.ஆ.ப., அவர்கள்,   கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: