×

2022 புரோ கபடி; முதல் முறையாக சாம்பியன் பட்டம் யாருக்கு? மல்லுக்கட்டும் முக்கிய அணிகள்

மும்பை: 12 அணிகள் மோதும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இந்தத் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக பாட்னா பைரேட்ஸ் அணி (3 முறை) உள்ளது. பெங்களூரு புல்ஸ் அணி 2 முறையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

தபாங் டெல்லி கே.சி அணி நடப்பு சாம்பியனாக வலம் வருகிறது. டெல்லி அணி கடந்த 2014 ஆம் ஆண்டிலே இத்தொடரில் இணைந்து இருந்தாலும், அந்த அணி கடந்த சீசனில் தான் முதல்முறையாக கோப்பையை முத்தமிட்டது. புரோ கபடி லீக் தொடரைப் பொறுத்தவரை, தபாங் டெல்லி கேசி, பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய 5 அணிகளும் கோப்பையை வென்ற அணிகளாக உள்ளன. ஆனால், மற்ற 7 அணிகளும் இன்னும் கோப்பையை வெல்லாத அணிகளாக உள்ளன. இந்த 7 அணிகளில், இந்தாண்டுக்கான தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள 3 அணிகள் குறித்தும், அவற்றின் பலம் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

தெலுங்கு டைட்டன்ஸ்

புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க சீசனில் இருந்தே தெலுங்கு டைட்டன்ஸ் அணி களமாடி வருகிறது. இதுவரை 2 முறை அரையிறுதிக்கு முன்னேறிய அந்த அணி, இறுதிப் போட்டிக்கு மட்டும் முன்னேற முடியாமல் இருந்து வருகிறது.
கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்து இருந்தது. மொத்தம் 22 போட்டிகளில் விளையாடிய அந்த அணி ஒரே ஒரு போட்டியில் தான் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் முன்னணி வீரர்களான சித்தார்த் தேசாய் மற்றும் ரோஹித் குமார் காயத்தால் அவதிப்பட்டு, பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். அதோடு, அணியில் டிபென்ஸ் ஆட சரியான வீரக்கள் இல்லாமலும் இருந்தனர். இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் கடைசி இடத்தைத் தான் பிடித்தது.

ஆனால், இம்முறை அந்த அணி பயிற்சியாளர்கள் முதல் முக்கிய வீரர்கள் வரை என அனைவரையும் புதுப்பித்துள்ளது தெலுங்கு டைட்டன்ஸ் நிர்வாகம். தற்போது அணியின் புதிய உதவி பயிற்சியாளராக மஞ்சீத் சில்லர் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கு டைட்டன்ஸின் வெற்றிக்கு திட்டங்கள் வகுத்து வரும் அவர் ஏலத்தில் முக்கிய வீரர்களை அந்த அணி வசப்படுத்த உதவியாக இருந்தார்.
தற்போது தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் ரெய்டிங் பிரிவில் மட்டும் ஐந்து மேட்ச்-வின்னர்கள் உள்ளனர். சித்தார்த் தேசாய், மோனு கோயத், அபிஷேக் சிங், அங்கித் பெனிவால் மற்றும் ரஜ்னிஷ் மற்றும் இவர்களுடன் ரவீந்தர் பஹல், சுர்ஜித் சிங், பர்வேஷ் பைன்ஸ்வால் மற்றும் விஷால் பரத்வாஜ் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த வீரர்கள் ஒரு யூனிட்டாக சிறப்பாக விளையாடினால், தெலுங்கு டைட்டன்ஸ் அணி அதன் முதல் சாம்பியன்ஷிப்பை வெல்வதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.

புனேரி பல்டான்

தெலுங்கு டைட்டன்ஸைப் போலவே, புனே அணியும் பலமுறை பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டிக்கு மட்டும் வரவில்லை. ஆனால், அதை மாற்றும் முயற்சியில் தற்போது அந்த அணி நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. புனேரி பல்டான் சீசன் 8-ல் இருந்து அஸ்லாம் இனாம்தார், மோஹித் கோயத் மற்றும் பங்கஜ் மோஹிதே ஆகியோரைத் தக்கவைத்துக் கொண்டது.

மேலும், அந்த அணி தங்களின் ரெய்டிங் பிரிவை வலுப்படுத்த ஈரானிய ஆல்ரவுண்டர் முகமது நபிபக்ஷை அணியில் சேர்த்துள்ளனர். கார்னர் டிஃபென்ஸில் சோம்பிருடன் ஃபசல் அட்ராச்சலியும், இரண்டு கவர் டிஃபென்டர்களாக அபினேஷ் நடராஜன் மற்றும் சங்கேத் சாவந்த் விளையாட இருக்கிறார்கள். தவிர, பேப்பரில் வலுவாக தென்படும் புனேரி பல்டான் இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பை முத்தமிட தயாராகி வருகிறது.

யு பி யோதாஸ்

யு பி யோதாஸ் இதுவரை விளையாடிய அனைத்து சீசன்களிலும் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டிக்கு முந்தைய நாக் அவுட் போட்டிகளில் அந்த அணியினர் எப்போதும் தோல்வியடைந்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு அணி பர்தீப் நர்வால், நிதின் தோமர் மற்றும் சுரேந்தர் கில் ஆகியோரைக் கொண்ட அருமையான ரெய்டிங் பிரிவைக் கொண்டுள்ளது.

மேலும், அணிக்கு டிபென்ஸ் ஆட நிதேஷ் குமார், சுமித், ஆஷு சிங் மற்றும் குர்தீப் போன்ற சில அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். அதோடு வலுவான ஆடும் செவனைக் கொண்டுள்ள அணியாகவும் யு பி யோதாஸ் அணி உள்ளது. தவிர, எந்த அணியையும் தோற்கடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள யு பி யோதாஸ் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags : Pro Kabaddi , 2022 Pro Kabaddi; Who won the title of champion for the first time? Major teams for wrestling
× RELATED புரோ கபடி 10வது சீசன் புதிய சாம்பியன் புனேரி பல்தான்