×

போக்குவரத்து நெரிசலை குறைக்க மருதமலை ரோடு 4 வழி சாலையாகிறது: லாலி ரோடு சந்திப்பில் ரூ.100 கோடியில் புதிய மேம்பாலம்

பீளமேடு: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மருதமலை ரோடு 22 மீட்டர் அகலப்படுத்தப்பட்டு 4 வழி சாலையாகிறது.  லாலி ரோடு சந்திப்பில் ரூ. 100 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த சாலை மட்டும் அப்படியே உள்ளது. ஆனால் வாகனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கோவை நகரின்  அனைத்து பகுதிகளிலும் காலை, மாலை நேரங்களில் வாகனங்களின் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையில்  சில சாலைகளில் மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

எனவே கோவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்ட  திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சிங்காநல்லூர் சந்திப்பு, சரவணம்பட்டி- துடியலூர் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

அதைத் தொடர்ந்து தற்போது லாலி ரோடு சந்திப்பில் புதிய மேம்பாலம்  கட்டப்பட உள்ளது. இதற்காக மூன்று வடிவமைப்பில் மேம்பால வரைபடங்கள் தயார் செய்யப்பட்டன. அதில் வடகோவை- மருதலை சாலையில் லாலி ரோடு சந்திப்பில் 13 மீட்டர் அகலத்தில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்புதல்  பெறப்பட்டுள்ளது.
 
புதிய மேம்பாலத்துடன் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி சென்டிரல் தியேட்டர் முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகளாகத்தில் உள்ள இந்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன அலுவலகம் வரையுள்ள மருதலை ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றி  அமைப்பதற்கும் கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அந்த சாலை 22 மீட்டரு க்கு அகலப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் கூறியதாவது: கோவை-மருதலை சாலையில் உள்ள லாலி ரோடு சந்திப்பில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. புதிய மேம்பாலம் கட்ட உத்தேசமாக  ரூ.100 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு சாலைகள் சந்திக்கும் லாலி ரோடு சிக்னலில் வடகோவை- மருதலை சாலையில் இந்த மேம்பாலம் கட்டப்படும். பாலத்தின் கீழ் வாகனங்கள் இடதுபுறம் எந்தவித சிக்னலும் இல்லாமல் திரும்பலாம். புதிய மேம்பாலம் ஆர்எஸ்புரம் உழவர் சந்தைக்கு சற்று தள்ளி தொடங்கி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முதல் கேட் வரை அமைக்கப்பட உள்ளது. தற்போது கேரளாவில் இருந்து பாலக்காடு சாலை வழியாக ஆர்எஸ் புரம், சாய்பாபா காலனி போன்ற பகுதிகளுக்கு  செல்பவர்களுக்கு இந்த பாலம் உபயோகமாக இருக்கும்.

கோவையில் அமைய உள்ள மேற்கு புறவழிச்சாலை மதுக்கரையில்  தொடங்கி சிறுவாணி சாலை, மருதமலை ரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகம் வழியாக கணுவாய், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையும். மேற்கு புறவழிச்சாலை வழியாக வருபவர்கள் பாரதியார் பல்கலைக்கழகம் அருகில் வந்து மருதமலை சாலை லாலி ரோடு சந்திப்பில் புதிய பாலம் வழியாக ஆர்எஸ்புரத்துக்கு  எளிதாக வரலாம்.சென்டிரல் தியேட்டர் முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இந்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன அலுவலகம் வரையுள்ள மருதலை ரோட்டின் ஒரு பக்கத்தில் தனியார் கட்டிடங்களும் மற்றொரு பக்கத்தில் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. சாலை விரிவாக்கத்துக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்தாமல் அரசுக்கு சொந்தமான நிலங்களை மட்டுமே கையகப்படுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Marudamalai Road ,Lally Road , Marudamalai Road becomes 4-lane road to reduce traffic congestion: New flyover at Lally Road junction at Rs 100 crore
× RELATED அடிக்கடி அழுது சேட்டை செய்ததால்...