×

கம்பம்-கோட்டயம் இடையே அரசு பஸ் இயக்கப்படுமா?: தமிழக அரசிடம் பொதுமக்கள் வேண்டுகோள்

கம்பம்: கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதிக்கு அரசு பஸ் இயக்க கடந்த 2018ல் அதிமுக ஆட்சிசில் அரசு ஆணை வெளியிட்டதோடு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்களின் போக்குவரத்துக்கான பஸ்களை இயக்கும் முக்கிய துறை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையாகும். தனியார் வசம் இருந்த இத்துறை கடந்த 1972 முதல் தமிழக அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒருசில பகுதிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்து பஸ்களை இயக்குகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் என 8 தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் மதுரை மண்டலமானது, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கும் பஸ்களை இயக்குகிறது. தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் 1, கம்பம் 2, குமுளி, தேவாரம், போடி என 6 பணிமனைகளிலிருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களில் போக்குவரத்து வண்டிகளை இயக்குவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே 1976ல் செய்து கொண்ட பரஸ்பர ஒப்பந்தப்படி, தொடக்கத்தில் கம்பம் கிளைகளிலிருந்து கேரளப்பகுதிகளான குட்டிக்கானம் மற்றும் ஏலப்பாறை நகரங்களுக்கு இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான குமுளி, வண்டிப்பெரியாறு, பாம்பனார், பகுதி பொதுமக்கள் தமிழகப்பகுதிக்கு வந்துசெல்ல இந்த பஸ்கள் பெரிதும் உதவியாக இருந்தது. அதன்பின் முதன்மை ஒப்பந்தத்தின் துணை ஒப்பந்தங்களின்படி, கம்பம் கிளையிலிருந்து தேக்கடி, கட்டப்பனை, நெடுங்கண்டம் பகுதிக்கும், பின் 2010 முதல், கம்பத்தில் இருந்து மேட்டுக்குழி, சாஸ்தாநடை, சுல்தானியா பகுதி வழித்தடத்திலும் பஸ் இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் அனுமதி பெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே, போக்குவரத்து வண்டிகளை இயக்குவது தொடர்பான முதன்மை ஒப்பந்தத்தின் 6வது துணை ஒப்பந்தப்படி, 2018ல் தமிழக போக்குவரத்து துறை, கேரள மாநிலத்தின் 30 வழித்தடங்களில் 54 பஸ்களையும், 25 வழித்தடங்களில் தற்போதைய இயக்கப்படும் பஸ்களை நீட்சி செய்யவும், தமிழகத்தின் 54 வழித்தடத்தில் 88 பஸ்களை கேரள அரசு போக்குவரத்து கழகம் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தேனி மாவட்டத்தில், கம்பத்தில் இருந்து ஏலப்பாறை சென்ற பஸ்சை ஒருநாளைக்கு இருமுறை கோட்டயம் வரையும், குமுளி வழியாக கட்டப்பனை சென்ற பஸ்சை, 4 முறை கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை வரையிலும், கம்பம்-தேக்கடி செல்லும் இரண்டு பஸ்களின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்தவும், கம்பம்-சுல்தானியா பஸ்சை போடி-மூணாறு வரையிலும், சிற்றிடை போக்குவரத்தாக கம்பம்-சாஸ்தாநடை ஒரு முறை சென்ற பஸ்சை இருமுறை சாஸ்தா நடை செல்லவும் கடந்த 2018 மே மாதம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டது.

ஆனால் அன்றைய அரசு, அரசு ஆணை வெளியிட்டதோடு சரி, இந்த பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் இயக்குவதா? அல்லது மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு போக்குவரத்துக்கழக கிளையிலிருந்து இயக்குவதா என குழப்பத்தில் இந்த புதிய வழித்தடங்களுக்கு பஸ் இயக்க போக்குவரத்து கழகங்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக கேரள எல்லையோர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த புதிய வழித்தட போக்குவரத்து திட்டம் நடைமுறைப் படுத்த அதிமுகஅரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்கள் நலனில் அக்கரை கொள்ளும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kambam-Kottayam ,Tamil Nadu government , Will government bus run between Kambam-Kottayam?: Public request to Tamil Nadu government
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...