கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க டேபிள் டாப் வேகத்தடை

ஊட்டி: கல்லட்டி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் டேபிஸ் டாப் (உயரமாக) வேகத்தடைகள் மற்றும் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகள் வளைந்து, நெலிந்து காணப்படும். அதேபோல், அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாக இருக்கும். இதில், வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். குறிப்பாக, ஊட்டியில் இருந்து மசினகுடி மற்றும் முதுமலை செல்லும் சாலை கல்லட்டி மலையில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதுதவிர, 100க்கும் மேற்பட்ட சிறு வளைவுகள் உள்ளன.

சாலை மிகவும் குறுகளாகவும், செங்குத்தான மலையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். ஆனால், இவ்வழித்தடத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் போதிய விழிப்புணர்வு இன்றி, வேகமாக வாகனங்களை இயக்கி அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். சில சமயங்களில் உள்ளூர் வாகனங்கள் கூட விபத்தில் சிக்கிக் கொள்கிறது.  இதனால், இவ்வழித்தடத்தில் தற்போது சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், அடிக்கடி இச்சாலையில் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இச்சாலையில்  விபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு அம்சங்களை நாளுக்கு நாள் நெடுஞ்சாலைத்துறை அதிகரித்து வருகின்றனர்.

கல்லட்டி மலை சரிவில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இச்சாலையில் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சாலையில் தாழ்வான பகுதியை நோக்கி செல்லும் சாலையில் ஐந்து இடங்களில் டேபிள் டாப் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாகனங்களின் வேகம் குறைக்கப்படும். இதனால், விபத்து ஏற்படுவதை தடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல், மேல் நோக்கி வரும் வாகனங்கள் இடையூறு இன்றி வருவதற்கு ஏற்றவாறு இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், இச்சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,``ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக மசினகுடி மற்றும் முதுமலை செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது கல்லட்டி பகுதியில் உள்ள செங்குத்தான சாலையில் பல இடங்களில் டேபிள் டாப் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இவ்வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் வேகம் குறைந்து பாதுகாப்பாக இயக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம், விபத்துகளும் குறையும்’’ என்றனர்.

Related Stories: