×

ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போபால்: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகளை குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து விடுவித்தார். காடுகள் அழிப்பு, வேட்டை போன்ற காரணங்களால் கடைசியாக சத்தீஸ்கரில் 1947ல் காணப்பட்ட சிவிங்கிப்புலிகள் 1952ம் ஆண்டில் இந்தியாவில் முற்றிலுமாக அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சிவிங்கிப்புலிகளை மறு அறிமுகம் செய்யக்கூடிய ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்திருந்தது. இந்திய காடுகளில் மீண்டும் வாழவைக்கும் முயற்சியாக, ஆப்ரிக்க நாடான நமீபியாவிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, 3 ஆண், 5 பெண் சிவிங்கிப்புலிகள் என மொத்தம் 8 சிவிங்கிப்புலிகள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு நேற்று வந்து சேர்ந்தது.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் மத்தியப்பிரதேசம் கொண்டுசெல்லப்பட்டது. தற்போது தனது பிறந்த நாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் 8 சிவிங்கிப்புலிகளை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். சிவிங்கிப்புலிகளை வனத்தில் விடுவித்ததுடன் அவற்றை புகைப்படம் எடுத்தும் பிரதமர் மோடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். செயற்கைகோள் மூலம் கண்காணிக்க 8 சிவிங்கிப்புலிகளில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. குனோ தேசிய பூங்காவில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தனிமையான குடில் போன்ற வீட்டில் சிவிங்கிப்புலிகள் அடைக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சிவிங்கிப்புலிகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூட்டில் வைக்கப்பட உள்ளது. இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் பல்கி பெறுவதற்கு ஏராளமான சவால்கள் இருந்தாலும் கூட அவற்றின் வாழ்விடத்தை காக்கும் அரசின் முனைப்பால் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று வன உயிரின ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Tags : Narendra Modi ,Namibia ,Kuno National Park , Namibia, Chivingipuli, Kuno National Park, Prime Minister Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...