×

மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கியது என கூறுவது போலியான வாதம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: காலை உணவு திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மாதவரம் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 37 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல்  காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மாதவரம் பகுதியில் இயங்கும் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்திலிருந்து உணவை, விநியோக செய்யும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வழங்கப்படும் என்ற அரசு அறிவிப்பின்படி மாணவர்களுக்கு ஒரு இனிப்பு மற்றும் கிச்சடி நேற்று வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேயர் பிரியா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை 110 விதியின் கீழ் சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டு, 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட்ட 37 பள்ளிகளில் இந்த திட்டமானது நேற்று தொடங்கி வைக்கப்பட்டது,’’ என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது ஒரு போலியான வாதம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஓரிரு பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டு சில நாட்களில் முடிவுக்கு வந்தது. மிகவும் சுகாதார முறையில் இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும்  காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது தயாரிக்கப்படும் உணவு தரம் மற்றும் தயாரிப்பிடம் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

2020ல் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில் காலை உணவுத் திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை. அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. தமிழ்நாட்டில் 282 பேர் எச்.1 என்.1 வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 குழந்தைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 9 குழந்தைகள் எச்.1 என்.1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த மாதம் மட்டும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறி பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம். எச்.1 என்.1 வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும்,’’ என்றார்.

Tags : AIADMK ,Minister ,M. Subramanian , It is a bogus argument to say that the breakfast program for students started during the AIADMK regime: Minister M. Subramanian interview
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...