×

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு

சென்னை: தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் காமராஜர், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை  தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார். பின்னர் இந்த திட்டம் சத்துணவு திட்டமாகவும் அதைத் தொடர்ந்து, வாரத்தில்  5 நாளும் முட்டை  வழங்கும் திட்டமாக 10ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவு படுத்தப்பட்டது.

காலை உணவை தவிர்க்கக் கூடாது  என்று மருத்துவர்களும்,மருத்துவத் துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் காலை உணவை தவிர்த்தால்  உடல் நலம், மன நலம் முற்றிலும் பாதிக்கும்  என்பதை கருத்தில் கொண்டு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அணணா பிறந்த நாளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும்  மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும்  வரலாற்று சிறப்பு மிக்க  உன்னத திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளார்.  இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார்.

தொழில் கல்விபடிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்  என்ற அறிவிப்பு,  இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன்  திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், சிற்பி திட்டம் என நாட்டிலே அனைத்து மாநிலங்களுக்கும்  முன்னோடியாக தனி அக்கறையுடன்  பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறார். அதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தற்போதுள்ள சத்துணவு திட்டததை 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும்  நீட்டிக்க வேண்டும்.  அதற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சூட்ட வேண்டும். தமிழக முதல்வர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில்  வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Tags : Teacher Development Association , Breakfast Program for Primary School Students: Teacher Development Association Welcome
× RELATED பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு