×

யானைகளை பார்வையிடும் அசாம் ஆய்வு குழுவுக்கு அனுமதி தர வேண்டும்: தமிழகத்துக்கு உத்தரவு

கவுகாத்தி: அசாமில் இருந்து பெறப்பட்ட யானைகளை பார்வையிட வரும் ஆய்வு குழுவுக்கு தமிழக அரசு அனுமதி, பாதுகாப்பு அளிக்க கவுகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஜாய்மாலா உள்பட 9 யானைகள் அசாமில் இருந்து கடந்த 2010-15ம் ஆண்டுகளில் பெறப்பட்டன. இவற்றில் ஜாய்மாலாவை பாகன்கள் சித்ரவதை செய்யும் வீடியோவை பீட்டா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பாகன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, தகவல் அறிந்த அசாம் அரசு தமிழகத்துக்கு வழங்கிய யானைகளை பார்வையிட குழுவை அனுப்ப ஒப்புதல் கேட்டது. ஆனால், தமிழக அரசு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து, அசாம் அரசு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுமன் ஷ்யாம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவு கிடைத்த 3 நாட்களுக்குள் அசாம் ஆய்வு குழுவுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டார்.மேலும், தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் டிஜிபி.க்கு ஆய்வின் போது அசாம் குழுவுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும்படி அறிவுறுத்தினார். இந்த வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இது தொடர்பாக, ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு அரசு வன செயலர் மற்றும் டிஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


Tags : Assam ,Tamil Nadu , Permission to Assam survey team to visit elephants: Order to Tamil Nadu
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...