3வது டி20ல் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

பிரிஸ்டோல்: இந்திய மகளிர் அணியுடனான 3வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர்  அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி 20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20ல் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்திலும் 2வது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று 1-1 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச, இந்திய அணி முன் வரிசை வீராங்கனைகள்  சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர் (2 பேர் டக் அவுட்). ஓரளவு தாக்குப்பிடித்த ரிச்சா கோஷ் 33 ரன் (22 பந்து, 5 பவுண்டரி), தீப்தி ஷர்மா 24 ரன் (25 பந்து) எடுத்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன் மட்டுமே எடுத்தது.  பூஜா வஸ்த்ராகர் 19 ரன் (11 பந்து, 2 பவுண்டரி),  ராதா யாதவ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில்  ஷோபி எக்லஸ்டோன் 3, சாரா கிளென் 2 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தொடக்க வீராங்கனைகள் சோபியா டங்க்லி 49 ரன் (44 பந்து, 6 பவுண்டரி), டேனியல் வியாட் 22 ரன் (23பந்து, 1பவுண்டரி) விளாசினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய   ஆலிஸ் கேப்ஸி 38 ரன் (24 பந்து, 6 பவுண்டரி), பிரையோனி ஸ்மித் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2 இன்னிங்சிலும் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. சோபியா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில்  இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், முதல் ஒரு நாள் போட்டி ஹோவ் கவுன்டி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

Related Stories: