உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு உதவ தனி இணையதளம்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் தங்களது படிப்பை முடிக்க உதவும் வகையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் விவரங்களைத் தெரிவிக்கும் இணையதளத்தை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பி உள்ளனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நீதிபதி ஹேமன் குப்தா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்களுக்கு உதவ ஒன்றிய அரசு தரப்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா? அவர்களின் செயல்பாடுகள் தற்போது வரையில் எந்த நிலையில் உள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன’’ என கேள்வி கேட்டனர். அதற்கு ஒரு அதிகாரி மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஹேமந்த் குப்தா, ‘‘20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு அதிகாரி நியமனம் என்பது போதுமானதா? இதனை எப்படி ஏற்க முடியும். மாணவர்கள் விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம்.

இந்த மாணவர்கள் வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தங்களின் படிப்பை தொடர்ந்து, அங்கு பட்டம் பெற ஒன்றிய அரசு உதவ வேண்டும். அதுதொடர்பான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் விவரங்கள் அடங்கிய தனி இணையதளத்தை உருவாக்கலாம்’’ என பரிந்துரைத்தனர். இதற்கு ஒன்றிய அரசு தரப்பில், ‘‘இந்த விவகாரத்தில் ஒரு வழிமுறைகளை உருவாக்க உள்ளோம். அதுகுறித்த ஆவணங்கள் அனைத்தும் விரைவில் நீதிமன்றத்தில் வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை வரும் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

*போர் பாதிப்பாக கருத முடியாது

மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘‘நாடு திரும்பிய இந்திய மாணவர்களை  போரினால் பாதிக்கப்பட்டவர்களாக அரசியல் சாசன பிரிவு 51ன் கீழ் அறிவிக்க  வேண்டும்’’ என தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  ‘‘நிலைமையை அந்த அளவிற்கு எடுத்து செல்லாதீர்கள். இப்போது நீங்கள் ஒன்றும்  போர்க்களத்தில் இல்லை. குறிப்பாக மருத்துவம் படிக்க நீங்களாக தான்  வெளிநாடுகளுக்கு சென்றீர்கள்’’ என தெரிவித்தனர்.

Related Stories: