×

மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 548 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை: மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 548 போலீசாருக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கி கவுரவித்தார். தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2022ம் ஆண்டு சென்னை மாநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்நிலையங்களில் பணிபுரியும் 210 காவலர்கள், போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் 148 காவலர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 73 காவலர்கள், நுண்ணறிவு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, குற்ற  ஆவண காப்பகம், பணியிடை பயிற்சி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 99 காவலர்கள், இதர பிரிவுகளான ரயில்வே, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுகளில் பணிபுரியும் 18 காவலர்கள் என மொத்தம் 548 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களுக்கு தகுதியானவர்கள் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதைதொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 548 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சென்னை மாநகர கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி.சரத்கர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்.


Tags : Minister ,City ,Commissioner ,Shankar Jiwal , Chief Minister's Police Medal awarded to 548 Policemen for outstanding service in City Police: Commissioner Shankar Jiwal
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த...