உக்ரைன் மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க உரிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கள் படிப்பை தொடர விரும்பினால் அவர்களுக்கு பொருத்தமான வெளிநாட்டு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை அடையாளம்  காணுவதற்கு வசதியாக  உரிய கட்டமைப்பை ஒன்றிய அரசு  ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்கள் மீண்டும் இந்தியாவில் தங்கள் படிப்பை தொடர்வதற்காக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஒன்றிய அரசின் தரப்பில், இந்தியாவில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் படிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடம் இல்லை என்றும், அப்படி அனுமதித்தால் இந்திய மருத்துவ கல்வியின் தரம் குறைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் சேர்ந்து படிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வெளி விவகாரத்துக்கான குழுவினர் உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடரலாம் என்று பரிந்துரை செய்ததால் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு எடுத்த மாறுதலான முடிவால் மாணவர்கள் நம்பிகை இழந்துவிட்டனர். இந்த விவரகாரத்தை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த மாணவர்களை இந்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வைப்பது கடினமானது என்றால், தனியார் கல்லூரிகளில் தனியாக கூடுதல் இடங்களை உருவாக்கி படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் சேர்ந்து  படிக்க அதிக கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலையில் இருப்பதால் வெளிநாடுகளில் செலுத்தும் கட்டணத்துக்கு இணையாக தனியார் கல்லூரிகளில் செலுத்தும் வகையில் ஒரு சிறப்பு கட்டணத்தை செலுத்தும் வகையில் பரிசீலிக்கலாம். இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதே அளவிலான கட்டணத்தை கல்விக்காக செலுத்த முடியும். இதுதவிர, வெளி விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் இந்த மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற பல்கலைக்கழகங்களை அடையாளம் கண்டு அதே பாடத்திட்டத்தில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையின் போது அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து செயல்படுத்த ஒரு  கட்டமைப்பை  உருவாக்க வேண்டும். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஏற்கனவே தங்களின் ஓராண்டு கல்வியை இழந்துள்ளனர். அதை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் உடனடியாக ஒன்றிய அரசு தலையிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: