அமெரிக்க கடலோர காவல் படையின் மிட்ஜெட் கப்பல் சென்னை துறைமுகம் வந்தது

சென்னை: குவாட் நாடுகள் மீதான சிறப்பு கவனத்துடன், இந்தோ பசிபிக் பகுதியை வலுப்படுத்துதல்,  இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள கடல்சார் எல்லைகளை கண்காணித்து பாதுகாப்பதற்கான திறன் வளர்த்தலுக்கு ஆதரவளித்தல் ஆகிய அம்சங்களுக்காக அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட் நேற்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது. மிட்ஜெட் கப்பலின் நீளம் 418 அடி, உத்திரம்  (பீம்) 54 அடி, டிராஃப்ட் 22 அடி, அதிகபட்ச வேகம்: 28 கேடிஎஸ், மொத்த  பணியாளர்கள் 143. இதில் 23 பேர் அதிகாரிகள், 120 பேர் மாலுமிகள். சென்னை துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இக் கப்பல் 19ம் தேதி வரை துறைரீதியான இருதரப்பு துறைமுக மற்றும் கடல்சார் பரிமாற்றங்களை மேற்கொள்கிறது.

இதுகுறித்து கேப்டன் கார் மைக்கேல் கூறியதாவது: மிட்ஜெட் கப்பலின் வரவு, நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை இரு நாடுகளின் கடலோர காவல் படையினர் பகிர்ந்து கொள்ள உதவும். இந்திய கடலோர காவல்படையுடனான ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் விழிப்புணர்வின் மூலம் சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க‌ இந்தோ- பசிபிக் பகுதியை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான 75 ஆண்டு கால நம்பிக்கை மிகுந்த கூட்டை குறிக்கும் வகையிலும், அமெரிக்க மற்றும் இந்திய கடலோர காவல்படைகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையிலும் மிட்ஜெட்டின் பயணம் அமைந்துள்ளது. 2022ம் ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய சர்வதேச கடல்சார் போர்முறை பயிற்சியான ரிம்பக்-கை  தொடர்ந்து இது நடைபெறுகிறது என்றார். இந்தோ பசிபிக் பகுதியில் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தில் முக்கிய பங்காற்றும் வகையில் படையினரிடையே கூட்டுறவை விரிவுபடுத்துவதற்காக 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் ஸ்ட்ரேட்டன் சென்னை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: