×

குமரியில் 19 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: தமிழகத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதையொட்டி மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக நாகர்கோவில் மாநகராட்சியில் 19 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இன்று காலை செட்டிகுளம் அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

இந்த பள்ளியில் பயிலும் 45 குழந்தைகளுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது: பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. அந்த வகையில் தற்போது காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இந்த திட்டத்தை மதுரையில் முதல்வர் நேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து இன்று மாவட்டங்களில் அமலுக்கு வந்திருக்கிறது. முதற்கட்டமாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட 19 பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது.

காலை உணவு பள்ளிகளில் தயார் செய்யப்படுவதில்லை. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள மைய உணவு சமையல் கூடத்தில் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இதை முறையாக கண்காணிக்க வேண்டும். உணவு தரமானதாக, சுவையானதாக இருக்கிறதா என்பதை கண்காணித்து இந்த திட்டம் தொடர்பான தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். எந்தவித குறைபாடும் வந்துவிடாமல் இதை கண்காணித்து சிறப்பான முறையில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தியாவில் தமிழகம் தான் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. எந்த வகையிலான திட்டமாக இருந்தாலும் சரி அதை சிறப்பாக செயல்படுத்தி மற்ற மாநிலங்கள் ஆச்சரியப்படும் வகையில் தமிழகம் விளங்குகிறது. பிற மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் பேசும் போது எப்படி உங்கள் மாநிலத்தில் இப்படி ஒரு சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறார்கள் என கேட்கிறார்கள். தமிழகம் செயல்படுத்தும் திட்டங்களை தான் முன்மாதிரியாக கொண்டு மற்ற மாநிலங்களுக்கு இந்திய அரசு செயல்படுத்துகிறது. எந்த திட்டமாக இருந்தாலும் சரி இந்திய அரசிடம் நிதியை எதிர்பார்க்காமல் தமிழக அரசு அதை சிறப்பாக செயல்படுத்தி சாதனை படைத்து வருகிறது.

காலை உணவு திட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும். இந்த திட்டத்தை தொடங்கி இருப்பதன் மூலம் தமிழகம் கல்வியில் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். மேயர் மகேஷ் பேசுகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களின் நலனுக்காக ஓய்வின்றி உழைத்து வருகிறார். குறிப்பாக கல்விக்காக பல்வேறு திட்டங்களை கடந்த ஓராண்டு காலத்தில் இந்த அரசு செயல்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கூட சென்னையில் மாணவர்களை செம்மைப்படுத்தும் வகையில் சிற்பி என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

 நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்கள் கல்விக்காக தொடங்கப்பட்டிருக்கின்றன. மதுரையில் நேற்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் பள்ளி குழந்தைகள் உடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த நிகழ்வை பார்க்கும் போது ஒவ்வொரு தாய்மார்களும் இனி நமக்கு கவலை இல்லை. முதலமைச்சர் நமக்கு துணையாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்கள். இந்த திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியில் முதற்கட்டமாக 19 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம். மிகச் சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பள்ளி தலைமை ஆசிரியர் மரிய பவுஸ்டின் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kumari , Breakfast program in 19 government schools in Kumari: Collector launched
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து