×

தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு தரும் முதல் முத்தம்: கமல்ஹாசன் பேச்சு

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் என்ஐடி பெஸ்ட் என்ற கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வெற்றி, தோல்வி இரண்டும் எனக்கு ஒன்று தான். ஓடிடி வந்ததால் திரையரங்குகள் அழியாது. தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், தற்போது இருக்கும் திரையரங்கு உள்ளிட்டவையும் தொடர்ந்து இயங்கி கொண்டுதான் இருக்கும்.

விரைவில் நானோ தொழில்நுட்பத்தில் சினிமா பார்க்கும் காலம் வரும். நடனமாக இருந்தாலும் சரி, பொறியியலாக இருந்தாலும் சரி பயிற்சி அவசியம்.
அரசியல் என்பது உங்கள் கடமை. அது தொழில் அல்ல. வாக்களிக்கும் வயது வந்தால் வாக்காளர் பட்டியலில் பெயரை முதலில் சேருங்கள். வாக்களிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்றவில்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம். கடமையை நாம் செய்யவில்லை என்றால் ஜனநாயகம் என நாம் நம்பி கொண்டிருக்கும் பலம், திருடர்கள் கையில்தான் இருக்கும்.

தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம். பின்லேடனும் பொறியாளர் தான். ஆனால் அவர் அழிக்கும் பொறியாளர். அது போல் நம் கல்வி இருக்கக்கூடாது. நீங்கள் கற்பது ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றார்.


Tags : Kamalhasan , Voting in elections is the first kiss of democracy: Kamal Haasan speech
× RELATED பாஜக தோல்வி பயத்தில் வெறிகொண்டு...