அன்னைத் தமிழுக்கு ஏற்றம் தரும் நடவடிக்கைகளை முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: அன்னைத் தமிழுக்கு ஏற்றம் தரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (16.09.2022) அன்னைத் தமிழில் வழிபாடு குறித்து திருக்கோயில்களில் பணிபுரியும் புலவர்களுக்கான பயிலரங்கம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சொல்வேந்தர் திரு.சுகிசிவம் மற்றும் முதுமுனைவர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகியோர் புலவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தலைமையுரை ஆற்றியதாவது, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் இந்த ஆட்சியின் தாரக மந்திரம். இது எல்லா நிலையிலேயும் தொடர வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விருப்பமாகும். அன்னைத் தமிழ் வழிபாட்டினை பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு நடைமுறைப்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

அதன் பிறகு பத்து ஆண்டுகள் அன்னைத் தமிழில் வழிபாட்டிற்கு மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது. அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் அன்னைத் தமிழுக்கு ஏற்றம் தரும் நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தினார்கள். முதற்கட்டமாக திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யப்படுவது குறித்த அறிவிப்பு பதாகைகள் திருக்கோயில்களின் முக்கிய இடங்களில் நிறுவ உத்தரவிடப்பட்டது. அதில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் விளம்பரப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அன்னைத் தமிழில் 14 வகையான போற்றி நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள்.

அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அதற்கான கட்டணத்தில் 60 சதவீத தொகையினை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இவையெல்லாம் தமிழை நேசிப்பவர்களுக்கும், தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என விரும்பும் பக்தர்களுக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

 திருக்கோயில்கள் மூலம் தமிழ் வழிபாட்டை வளர்ப்பதற்கும், தலபுராணம், தலவரலாறுகளைத் தொகுக்கவும், பக்தர்களுக்கு திருக்கோயிலைப் பற்றிய விவரங்களை எடுத்துரைக்கும் பொருட்டும் 1997 ஆம் ஆண்டில் திருக்கோயில்களுக்குத் தமிழ்ப் புலவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இடைப்பட்ட காலங்களில் அவர்கள் வேறு பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையை மாற்றி மேற்சொன்ன பணிகளை மட்டுமே செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சட்டத் திட்டங்களுக்குட்பட்டு திருக்கோயில்களுக்கு புதிய தமிழ் புலவர்களை நியமித்திடவும், ஏற்கனவே பணியில் இருக்கின்ற புலவர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கிடவும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனை நிறைவேற்றிடும் வகையில் திருக்கோயில்களில் பணிபுரியும் புலவர்களுக்கான பயிலரங்கம் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிலரங்கத்தில் விழா நாட்களில் தமிழில் வழிபாடு குறித்த சிறப்புகளை மக்களுக்கு விளக்கி சொல்லவும், அவற்றை பரப்புரை செய்யவும் ஏதுவாக புலவர்கள் தயார் செய்யும் வகையில் முதுமுனைவர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் மற்றும் சொல்வேந்தர் திரு.சுகிசிவம் ஆகியோரை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு வருகை தந்திருக்கின்ற புலவர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அன்னைத் தமிழில் வழிபாடு குறித்த அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக பணியாற்றிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இப்பயிலரங்கில் சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்கள் பேசும்போது,  தமிழில் வழிபாடு என்பது தாய்மொழியின் வழியாக இறைவனை வணங்குகின்றபோது அன்பு, நெருக்கம், உருக்கம் ஏற்படும். அப்படிப்பட்ட உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்து சமயத்தினுடைய உண்மையான, ஆழமான கருத்துக்களை சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர்களாக ஒவ்வொரு கோயில்களிலும் புலவர்கள் விளங்க வேண்டும். மக்கள் மனதில் இருக்கின்ற ஐயங்களான, இந்த வழிபாடு ஏன் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? இந்த நாளில் இறைவனை வணங்க வேண்டும் என்பதற்கு என்ன காரணம்? போன்றவற்றிற்கு விடை சொல்லுகிற தகுதிமிக்க நபராகவும் விளங்க வேண்டும்.

அதற்கு நீங்கள் நிறைய புத்தகங்களை வாசிப்பது, சமய சான்றோர்களின், பெரியவர்களின் உரைகளை கேட்பது அவசியமானதாகும். அதற்கு வசதியாக இன்றைக்கு யூடியூப், கூகுள் போன்றவற்றிலிருந்து பல்வேறு செய்திகளை நீங்கள் சேகரித்து அடுத்த தலைமுறையான 21 வயதிற்குட்பட்டவர்கள் நம் சமயத்தை நேசிக்கும் வகையில் விஞ்ஞானப்பூர்வமாக விளக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் நீங்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். திருமுறை, திவ்ய பிரபந்தங்களை கற்றும், விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களை சொல்லக்கூடிய நவீன கல்வியை கற்றும், இன்றைய இளைஞர்கள் கேட்கிற கேள்விகளுக்கு விடை சொல்லக்கூடிய வகையில் இந்து சமயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கின்ற பணியினை செய்திட வேண்டும்.

மேலும், திருக்கோயில்களுக்கு பக்தர்கள் அதிகம் வரும் நாட்களில் ஆன்மிக உரை நிகழ்த்துகின்ற பழக்கத்தையும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு சமய வகுப்புகள் எடுக்கின்ற பணிகளையும் புலவர் பெருமக்கள் மேற்கொள்ள வேண்டும். பாலாலயம், பிராணப் பிரதிஷ்டை, நாடி சந்தானம் செய்வது போன்ற குடமுழுக்கில் என்னென்ன சடங்கு செய்கிறார்களோ இவ்வளவுயும் தமிழில் செய்ய முடியும் என்பதை ஆழ்வார்களும், ஞானிகளும் நிரூபித்திருக்கிறார்கள். சைவத்திலே பூசலாரின் வரலாறு, வைணவத்தில் திருமழிசை ஆழ்வார் வரலாறுகளை எல்லாம் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும், ஆழ்வார்களுடைய குரு பரம்பரை பிரபாவம் நூலை நீங்கள் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும்.

அதில் இந்து மதம் என்ன சொல்கிறது என்பதை தெளிவாக அறிந்துக் கொள்ளலாம். அதன் அச்சிடப்பட்ட நூல் கிடைக்கவில்லை எனில், அறநிலையத்துறையை அதனை அச்சிட்டு மறுபதிப்பு கொண்டு வரும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, முதுமுனைவர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு அமைச்சர் அவர்களும் பொறுப்பேற்றபின் இந்த துறையானது உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

தலைமை சரியாக இருந்தால் நிலைமையும் சரியாக  இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.  சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்கள் தமிழில் வழிபாட்டை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். தமிழில் குடமுழுக்கு செய்வதற்கான பணிகளை மிகவும் எளிமையாக்கி கொடுப்பதற்கு இந்த பயிலரங்கத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த இப்பணியை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செய்திடுவோம். அதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களும், ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் உறுதுணையாக விளங்குவார்கள்.

இப்பயிலரங்கம் தமிழில் வழிபாடு செய்வதற்கும், சமய கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்பிரியா, இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: