குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் திருச்சி விமான நிலையம் வந்தது..!!

திருச்சி: குவைத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த முத்துக்குமரன் உடல் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. முத்துக்குமரன் உடலை பெறுவதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு உறவினர்கள் வருகை தந்துள்ளனர். முத்துக்குமரன் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டிருப்பது அவரது இறப்பு சான்றிதழ் மூலம் தெரியவந்திருக்கிறது. அதில், முத்துக்குமரனின் உடல் முழுக்க தாக்கப்பட்டு கடுமையான காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக மார்பு மற்றும் விலா பகுதிகளில் எலும்புகள் உடைந்துள்ளன. வலது முன் கை எலும்பு, கால் பாதம் உடைந்திருக்கிறது. தலையில் கடுமையாக தாக்கப்பட்டதால் தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து முத்துக்குமரன் உடல் திருச்சியில் இருந்து சொந்த ஊரான லெட்சுமாங்குடிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

முத்துக்குமரன் உயிரிழப்பு:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில், நட்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டார். வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தை தேடி கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3ம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். குவைத் நாட்டுக்கு சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்க கூறி உள்ளனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார். இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டு இருந்த வேளையில், கடந்த 7ம் தேதி புதன்கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. முத்துக்குமரன் பணி செய்த குவைத் நாட்டை  சேர்ந்தவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாக தகவல் கிடைத்து, அவரது மனைவியும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவலை தெரிவித்து, முத்துக்குமரன் உடலை உடனே தாயகம் கொண்டு வருவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு உதவிட வேண்டும் என்று கேட்டனர். மேலும் ஒன்றிய வெளியுறவுத்துறை இதில் உடனடியாக தலையிட்டு, குவைத் நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்குகொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். முத்துக்குமரனை கொன்ற குவைத் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்; ஏஜெண்டாக செயல்பட்ட ஆந்திரா, உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: