×

குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தத்தில் சிதிலமடைந்த அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?.. கிராமமக்கள் எதிர்பார்ப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடத்த அரசு உத்தரவிட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் இக்கட்டிடம் குறித்து கணக்கெடுத்து உடனே சீரமைப்பு பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் (அங்கன்வாடி) உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதில் அங்கன்வாடி மைய ஆசிரியை, சமையலர் என இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டிடம் போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால் நாளைடைவில் கட்டிடத்தில் விரிசல் எற்பட்டுள்ளது. மையத்தில் பொருட்கள் வைக்கும் இருப்பு அறை, சமையல் அறையில் காங்கிரீட் மேற்கூரை பெயர்ந்துள்ளது. இதனால், கம்பிகள் வெளியே தெரிகின்றன.

குழந்தைகள் அமர்ந்து சாப்பிடும் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் உடைந்த நிலையில் உள்ளது. பக்கவாட்டு சுவரும் இடிந்த நிலையில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த தொடர் மழையால் கட்டிடம் வலுவிழந்தது. இதனால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அல்லது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்லாநத்தம் கிராமமக்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2021 நவம்பர் மாதம் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, மிகவும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கு பொதுப்பணி துறை அமைச்சகத்திடமிருந்து விவரம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவற்றை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார். மேலும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களில் மாணவ, மாணவிகள் அமர்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆனால் சேதமடைந்த இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இதுவரை கணக்கில் எடுத்து கொள்ளாமல் உள்ளனர். இதனால் இக்கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற ஒரு அச்சத்துடன் கிராமமக்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்தல், ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கி செல்தல், மருத்துவ ஆலோசனை பெறுதல் ஆகியவற்றிற்கு இந்த மையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் அவர்களும் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஒருவித உயிர் பயத்துடன் வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அல்லது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : Pallanam ,Gujiliyampara , Kujiliamparai, dilapidated Anganwadi building, villagers expect
× RELATED பாதை வசதி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தாக கடக்கும் மக்கள்