கரூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி பிரிவில் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்களின் 10ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்ற எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி: கரூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தடாகோவில் அருகே அரவக்குறிச்சி பிரிவில் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற 10 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தடாகோவில் அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து நங்காஞ்சி ஆறு பாலம் வழியாக அரவக்குறிச்சிக்குச் செல்லும் பிரிவு ரோடு உள்ளது.

கரூர், சேலம் பெங்களூரு உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் வட மாநில பகுதியிலிருந்து, பொள்ளாச்சி, தாராபுரம், பழனி மற்றும் கேரள மாநிலத்திற்கும், கரூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலையின் குறுக்கே சென்று இந்த பிரிவிலிருந்து அரவக்குறிச்சி வழியாகத்தான் பேருந்துகள், கனரக வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். இதனால் இது ஒரு முக்கிய சாலையாக இருந்து வருகிறது.

இதேபோல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொத்தனார் வேலைக்கும், தச்சர், பெயிண்டர் என்று பல்வேறு கூலி வேலை செய்ய செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் என்று பலரும் செல்லவேண்டுமானால் கரூர் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்காக கடந்து தான் செல்ல வேண்டும். இவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் கடந்து செல்லுகின்றனர். இந்த தேசிய நெடுஞ்சாலை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் நீண்ட தூர நெடுஞ்சாலையாகும்.

இதனால் இந்த நெடுஞ்சாலையில் எப்போதுமே போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதில் ஏராளமான இடைவிடாத வாகன போக்குவரத்து காரணமாக இந்த நெடுஞ்சாலையில் வாகன இரைச்சலுடன் பரபரப்பாக காணப்படும். மேலும் நெடுஞ்சாலை என்பதால் சாலையின் இருபுறமும் கார்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள் அதி வேகமாக செல்கிறது. இவ்வாறு அனைத்து வாகனங்களும் அதி வேகமாக சென்று வரும் வேளையில் மேற்குறிப்பிட்ட தடாகோவில் அருகே உள்ள பிரிவு பகுதி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் குறுக்கே கடந்து செல்லும்போது அதி வேகமாக சென்று வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் விபத்தினால் பல உயிர் பலி ஏற்பட்டு வருகின்றது. இந்த பிரச்சனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டால், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தில் சென்று விடும். அரவக்குறிச்சி வழியாகச் செல்லும் அனைத்து

வாகனங்களும் மேம்பாலத்தின் அடியில் சென்று விடும். இதனால் விபத்துக்கள் இல்லாமல் உயிரிழப்பு முற்றிலும் தடுக்கப்படும். இந்நிலையில இவ்வளவு வாகன போக்குவரத்து மிகுந்த முக்கியமான பிரிவில் மேம்பாலம் அமைப்பதற்கு பலமுறை இத்துறை தொடர்பன உயரதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தடாதோவில் அருகே அரவக்குறிச்சி பிரிவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: