×

அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர்

மீனம்பாக்கம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவா்கள், இன்று காலை விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை, அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு வேனில் அனுப்பி வைத்தனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் படகுகளுடன் அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து ஒன்றிய அரசு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறி, இலங்கை அரசுடன் பேச ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், 12 மீனவர்களையும் விடுதலை செய்தது. அவர்கள், இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள், அவசர விசாவுக்கு ஏற்பாடு செய்து 12 மீனவர்களையும் இன்று அதிகாலை, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை அரசின் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, வாகனத்தில் ஏற்றி நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தனர்.



Tags : Sri Lanka ,Chennai , 12 snake fishermen who were jailed in Sri Lanka for illegal fishing returned to Chennai by plane
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்