கிண்ணக்கொரை சாலையில் காட்டு மாடுகள் நடமாட்டம்

மஞ்சூர்:  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலா, கேரிங்டன், கிண்ணக்கொரை பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக தேயிலை தோட்டங்களுக்கிடையே மேய்ச்சலில் ஈடுபடுவதால் இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில், கேரிங்டன் பகுதி தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை காட்டு மாடு ஒன்று விரட்டியது.

இப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வனப்பகுதிகள், தோட்டங்கள் பசுமைக்கு திரும்பியுள்ளது. சாலையோரங்களிலும் புற்கள் அதிகளவில் வளர்ந்து செழிப்பாக காணப்படுவதால் தற்போது காட்டு மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட சாலைகளில் நடமாடி வருகிறது. குறிப்பாக, கேரிங்டன் முதல் கிண்ணக்கொரை தணயகண்டி பகுதிவரை சாலை அடர்ந்த வனப்பகுதியில் நடுவே அமைந்துள்ளதால் இச்சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

சாலையில் ஆங்காங்கே மேய்சலில் ஈடுபட்டும், ஓய்வெடுத்த நிலையில் காட்டு மாடுகள் காணப்படுவதால் இவ்வழியாக வாகனங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடனும், காட்டு மாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: