×

அடிக்கடி கட்சி மாறும்; பண்ருட்டி ராமச்சந்திரனின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை: செங்கல்பட்டு அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

செங்கல்பட்டு: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவுக்கு பண்ருட்டி அறிவுரை கூறுகிறார். அவருக்கு அந்த தகுதி இல்லை. ஜெயலலிதாவை விமர்சனம் செய்து விட்டு வெளியேறியவர். பின்னர், பாமகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராகி யானை மீது அமர்ந்து சட்டமன்றத்துக்கு வந்தார். பின்னர் அந்த யானையையே மறந்து விட்டார். அதன் பிறகு, தேமுதிகவுக்கு சென்றார். அந்த கட்சியையும் மூழ்கடித்து விட்டார். அதிமுக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு உங்களது அறிவுரை தேவையில்லை. வந்தால் வாருங்கள், அறிவுரை வேண்டாம். அதிமுக கிளை செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை.

அதிமுக தொண்டன் என்பவன், கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும். அவருக்குதான் மரியாதை. அடிக்கடி கட்சி மாறும் உங்களை போன்றவருக்கு இடமில்லை. நான் பிரசாரம் செய்த இடத்தில் வேட்பாளர்கள் தோற்று விட்டதாக கூறுகிறார். நான் என்ன பெமிலியர் பிகரா, ஹீரோவா.. உங்களை போன்ற ஒரு தொண்டன். விவசாயி. சூறாவளி சுற்றுப்பயணம் சென்று கூட்டணியுடன் சேர்த்து 75 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது போதாதா? எத்தனையோ தலைவர்கள் தோற்றிருக்கிறார்கள். நான் இவ்வளவு தூரம் ஜெயித்து காட்டியிருக்கிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரனை வன்முறையாக கண்டிக்கிறேன். அவர் வேடந்தாங்கல் பறவையை போன்றவர். சீசனுக்கு தகுந்தார்போல் அவ்வப்போது வந்து செல்வார். அவரது விமர்சனங்களை படிக்கட்டுகளாக வைத்து கட்சியை வளத்தெடுப்போம். அதிமுக ஆட்சியில்தான் இந்த மாவட்டம் (செங்கல்பட்டு) உதயமானது. புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. மாவட்டத்தில் 3 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டது. பல்லாவரம் மேம்பாலம், வண்டலூர் மேம்பாலம், வண்டலூர் தனி தாலுகா உருவாக்கப்பட்டது.

செங்கல்பட்டு, மதுராந்தகம் ஏரி தூர்வார நிதி ஒதுக்கப்பட்டது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் ஆண்டுக்கு 445 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 114 பல் மருத்துவர்கள் உருவாகுகின்றனர். இந்த இடஒதுக்கீடு எனது சிந்தனையில் உதித்தது. போதை பொருள்கள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி இணை செயலாளர்கள் மரகதம் குமரவேல், கணிதா சம்பத், மாவட்ட பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், நகர செயலாளர்கள் செந்தில்குமார், சீனிவாசன், ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், கஜா (எ) கஜேந்திரன், விஜயரங்கன், செல்வம், ராகவன், குமரவேல், விவேகானந்தன், ரஞ்சன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்த பழைய பஸ் நிலையம் மக்கள் நெருக்கமான பகுதி. இப்பகுதியை சுற்றிலும் உழவர் சந்தை, மார்க்கெட், போலீஸ் நிலையம், மாவட்ட மைய நூலகம், மாவட்ட சிறைச்சாலை, சார்பதிவாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகம் உள்ளது. இதுமட்டுமின்றி, தூய கொலம்பா மேல்நிலை பள்ளி, தொடக்க பள்ளி, தூய ஜோசப் மேல்நிலை பள்ளி, தூய மரியன்னை மேல்நிலை பள்ளி, மெட்ரிக் மேல்நிலை பள்ளி, செவந்த் டே அட்வெஞ்சர் பள்ளி, அறிஞர் அண்ணா ஆண்கள், பெண்கள் பள்ளி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி,

கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆர்ப்பாட்டத்தால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறைமலைநகர் முதல் செங்கல்பட்டு வரை சுமார் 15 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது. கடுமையான போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களும் சிரமப்பட்டனர்.


Tags : panrutti ramachandran ,edapadi palanisamy ,chengalpattu , Party changes frequently; We don't need Panruti Ramachandran's advice: Edappadi's speech at Chengalpattu AIADMK rally
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!